பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்
இந்த ஆண்டில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில், பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துநர்களில் சுமார் 10 சதவீதமானோர் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல், தென், வடமேல் மற்றும் சபரகமுவ ஆகிய மாகாணங்களை உள்ளடக்கிய வகையில் இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டதாக தேசிய போக்குவரத்து நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் கிளிஃபோர்ட் பெரேரா தெரிவித்தார்.
பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துநர்களை இலக்காகக் கொண்டு இதுவரை 7,602 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு நடத்தப்பட்ட சோதனைகளில் 5 முதல் 10 சதவீதமானோர் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகத் தலைவர் குறிப்பிட்டார்.
நான்கு வகையான போதைப்பொருட்கள் தொடர்பாக இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டதாகவும், இதில் பரிசோதிக்கப்பட்ட நபர் ஒருவர் இந்த போதைப்பொருட்களில் ஒன்றையோ அல்லது பலவற்றையோ பயன்படுத்தியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.