இலங்கையில் இருந்து விரைவில் இரண்டு உயர்மட்ட அரச பயணங்கள்
இலங்கையில் இருந்து அடுத்த வாரம் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இரண்டு உயர்மட்ட அரச பயணங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, பிரதமர் தினேஸ் குணவர்தன சீனாவிற்கும், ஜனாதிபதியின் தலைமை அதிகாரி மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க இந்தியாவிற்கும் செல்லவுள்ளனர்.
உத்தியோக பூர்வ விஜயம்
நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க மற்றும் பிரதமரின் செயலாளர் அனுர திசாநாயக்க ஆகியோருடன் பிரதமர் மார்ச் 25 - 29 வரை சீனாவில் விஜயம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், பிரதமர் லீ கியாங் மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மூன்றாவது மிக உயர்ந்த உறுப்பினர் ஆகியோரை அவர்கள் சந்திக்க உள்ளனர்.
இதற்கிடையில், மார்ச் 27 முதல் 28 வரை, சாகல ரத்நாயக்க தலைமையிலான குழுவொன்று புதுடில்லிக்கு விஜயம் செய்யவுள்ளது.
இந்த தூதுக்குழுவில் போக்குவரத்து மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகங்களின் செயலாளர்கள், தொடருந்து பொது மேலாளர் மற்றும் சுங்க இயக்குநர் உட்பட்டவர்கள் உள்ளடங்குவதாக கூறப்படுகின்றது.
இந்த பயணத்தின் முதன்மை நோக்கம், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நில இணைப்பு பற்றிய பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பதாகும் என்று அதிகாரப்பூர்வ தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
எனினும் இந்த குழு இந்தியாவில் யாரை சந்திக்கும் என்பது பற்றிய கூடுதல் விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க புதுடில்லிக்கு விஜயம் செய்தபோது, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே நில இணைப்பை ஏற்படுத்துவது உட்பட்ட பல விடயங்களில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இணக்கம் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |