கொட்டகலையில் இரண்டு எரிவாயு அடுப்புக்கள் வெடிப்பு! (VIDEO)
நாட்டில் தற்போது பல இடங்களில் எரிவாயு அடுப்பு மற்றும் எரிவாயு கொள்கலன்கள் வெடிப்பு சம்பவங்கள் பல ஆங்காங்கே பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில், வல்வெட்டிதுறை பகுதியில் வீடொன்றில் சமைத்துக் கொண்டிருந்த போது எரிவாயு அடுப்பு வெடித்துள்ள சம்பவம் ஒன்றும் பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவம் இன்று (18) இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புதிய இணைப்பு
கொட்டகலை வணிகசேகரபுர பகுதியில் உள்ள வீடு ஒன்றில் எரிவாயு அடுப்பு வெடித்து தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
உடனே வீட்டார்கள் ஈரத்துணியொன்றின் மூலம் தீயினை கட்டுப்படுத்தியதாகவும் இதன்போது முகத்தில் சிறிய அளவு பாதிப்பு ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
குறித்த வீட்டின் எரிவாயு சிலிண்டர் புதிய சிவப்பு முத்திரை பொறிக்கப்பட்ட ஒரு வாரத்துக்கு முன் வாங்கிய சிலிண்டர் எனவும் இதன்போது தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவங்கள் தொடர்பாக திம்புள்ள பத்தனை பொலிஸார் மற்றும் நுவரெலியா கைரேகை அடையாளப்பிரிவு ஆகியோர் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் சமையல் எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவங்கள் இரண்டு பதிவாகியுள்ளது.
குறித்த வெடிப்பு சம்பவம் நேற்று (17) மாலை இடம்பெற்றுள்ளது.
கொட்டகலை, பத்தனை கிறேக்கிலி தோட்டத்தில் வீடு ஒன்றில் இந்த வெடிப்பு சம்பவம் இரவு 07.00 மணியளவில் இடம்பெற்றதாக பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சமைத்துக் கொண்டிருந்த போது அடுப்பு திடீரென வெடித்து சிதறியுள்ளது.
அடுப்புக்கு பாவிக்கப்பட்டுள்ள லிட்ரோ எரிவாயு சிலிண்டர் பொங்கியிருந்தமையும் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, கொட்டகலை சிமோல் டிரேட்டன் தோட்டத்தில் குடியிருப்பாளர்கள் எரிவாயு அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்த போது, திடீரென எரிவாயு அடுப்பு வெடித்ததால், எரிவாயு அடுப்பு பலத்த சேதம் அடைந்துள்ளது.
இவ்விரு வெடிப்பு சம்பவத்தினால் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதுடன் திம்புள்ள பத்தனை பொலிஸார் இவ்விரு சம்பவ இடங்களுக்கும் சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.




