தமிழ் வர்த்தகரிடம் கொள்ளையடித்த மனம்பேரி: தோண்டப்படும் பழைய வழக்கு
2009ஆம் ஆண்டு கொழும்பு நாரஹேன்பிட்டி பகுதியில் தமிழ் வர்த்தகர் ஒருவரை அச்சுறுத்தி அரிசி லொறியை கொள்ளையடித்த சம்பவம் தொடர்பான வழக்கில் சந்தேகநபரான சம்பத் மனம்பேரியைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரசாந்த கொடவெல இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
சம்பத் மனம்பேரி, தற்போது மித்தெனிய பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே, 2009ஆம் ஆண்டு கொள்ளை வழக்கு தொடர்பில் இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குற்றப்பத்திரிகை
குறித்த வழக்கு இன்று(30) விசாரணைக்கு வந்தபோது, அவர் வேறொரு வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக அவரது சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, சந்தேகநபர் குறித்த அறிக்கையை அடுத்த தவணையில் சமர்ப்பிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
2009ஆம் ஆண்டு ஒகஸ்ட் 12ஆம் திகதி, நாரஹேன்பிட்டி சந்தியருகே, பொலிஸ் அதிகாரிகள் போல வேடமிட்டு, கிழக்கு மாகாணத்தில் இருந்து கொழும்புக்கு அரிசி கொண்டு வந்த தமிழ் வர்த்தகரை அச்சுறுத்தி, சுமார் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான அரிசி லொறி, பணம் மற்றும் கையடக்கத் தொலைபேசியைக் கொள்ளையடித்ததாக சம்பத் மனம்பேரி உட்பட நான்கு சந்தேகநபர்கள் மீது சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கில் மற்றொரு சந்தேகநபரான நிரஞ்சன் பெரேராவும் போதைப்பொருள் வழக்கில் விளக்கமறியலில் உள்ளதால், இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



