விபத்தில் சிக்கிய படகில் இருந்த இரண்டு கடற்றொழிலாளர்கள் மீட்பு
தலை மன்னார் வடக்கு கடல் பகுதியில் விபத்தில் சிக்கிய மீன்பிடிப் படகில் இருந்த இரண்டு கடற்றொழிலாளர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்பில், கடற்படையினரால் இன்று (21.09.2026) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையின் போதே இவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
தேடுதல் மற்றும் மீட்பு வலயத்திற்குள்
யாழ்ப்பாணம் குருநகர் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த 19 ஆம் திகதி இரண்டு கடற்றொழிலாளர்களுடன் புறப்பட்ட ஒரு நாள் மீன்பிடிப் படகு மீண்டும் துறைமுகத்திற்கு திரும்பவில்லை என்றும், அந்தப் படகை கண்டுபிடிப்பதற்கு கடற்படையின் உதவியை வழங்குமாறும், கடற்றொழில் மற்றும் நீர் வளங்கள் திணைக்களத்தினால் கொழும்பு கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவித்தலுக்கு உடனடியாக பதிலளித்த கொழும்பு கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையம், அந்த கடல் பகுதியில் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடும் படகுகளுக்கு இது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு கடற்றொழில் மற்றும் நீர்வாழ் வளங்கள் திணைக்களத்திற்கு அறிவுறுத்தியது.

அதன்படி, வடமத்திய கடற்படை கட்டளையினால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையின் மூலம், தலைமன்னாருக்கு வடக்கு கடல் பகுதியில் எரிபொருள் இன்றி செயலிழந்து மிதந்து கொண்டிருந்த ஒரு நாள் கடற்நொழில் படகு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அதில் இருந்த இரண்டு கடற்றொழிலாளர்கள் இவ்வாறு பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
மேலும் அந்த கடற்றொழிலாளர்களும் ஒரு நாள் மீன்பிடிப் படகும் தலைமன்னாருக்கு கொண்டுவரப்பட்டதுடன், அங்கு கடற்றொழிலாளர்களுக்கு தேவையான மனிதநேய உதவிகள் வழங்கப்பட்டன.
மேலும், கொழும்பு கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்பில், இலங்கைக்குச் சொந்தமான கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு வலயத்திற்குள் ஆபத்தில் சிக்கி தவிக்கும் கடற்படை மற்றும் மீனவ சமூகத்திற்கு நிவாரணம் வழங்குவதற்காக, தயார் நிலையில் உள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது.