கடலில் குளிக்க சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு! சோகத்தில் குடும்பத்தினர்
திருகோணமலை - ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாழைத்தோட்டம் பகுதியில் கடலில் குளிக்கச் சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று (03)மாலை இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்த சிறுவர்கள் திருகோணமலை -மாவடிச்சேனை,வாழைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த யோகேந்திர ராசா லக்ஸன் (14 வயது) , தினேஷ் காந்தன் இம்ரோஜன் (12 வயது) எனவும் தெரிவித்துள்ளனர்.
ஆறு சிறுவர்கள் ஒன்றிணைந்து வாழைத்தோட்டம் பகுதியில் உள்ள கடலில் குளிப்பதற்காக சென்ற போது இரண்டு சிறார்கள் நீரில் மூழ்கியதாகவும், இதனை அடுத்து மற்றைய சிறுவர்கள் வீட்டுக்கு வந்து குறித்த இரண்டு சிறார்களும் நீரில் மூழ்கியதாக தெரியப்படுத்தியதையடுத்து அங்கு விரைந்த மக்கள் இரண்டு சடலங்களையும் மீட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
உயிரிழந்த இருவரின் சடலங்களும் ஈச்சிலம்பற்று பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் , பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்த சிறுவர்களின் சடலங்களை பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் மரணம் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சரிகமப Li’l Champs சீசன் 4ல் வெற்றிப்பெற்றவர்களுக்கு கிடைத்த பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா? Cineulagam
