மகிழுந்து ஒன்றில் கேரளா கஞ்சா கடத்திய இருவர் கைது(Photo)
கிளிநொச்சியிலிருந்து அம்பாறை - பொத்துவில் பிரதேசத்திற்கு மகிழுந்து ஒன்றில் கஞ்சா கடத்தி சென்ற எட்டரை கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் இருவரைக் கைது செய்துள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவதினமான இன்று அதிகாலை 5மணியளவில் கல்முனை - நீலாவணை வீதி சோதனைச்சாவடியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டதுடன் மகிழுந்து ஒன்றையும் கைப்பற்றியுள்ளனர்.
கல்முனையை நோக்கி பிரயாணித்த மகிழுந்து ஒன்றை நிறுத்தி இராணுவத்தினர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன்போது மகிழுந்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த எட்டரை கிலோகிராம் கேரளா கஞ்சாவை மீட்டுள்ளதுடன், இருவரைக் கைது செய்து கல்முனை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் பொலன்னறுவை மற்றும் திருக்கோவில் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்கள் கிளிநொச்சியிலிருந்து பொத்துவில் பிரதேசத்திற்குக் கஞ்சாவை விற்பதற்காகக் கடத்திச் சென்றுள்ளார்கள் எனவும் பொலிஸாரிடம் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




