புங்குடுதீவில் கொடூரம்! சினைப்பசுவைக் கொன்று கும்பலில் இருவர் கைது
வேலணை - புங்குடுதீவு மடத்துவெளி பகுதியில் நிறைமாதக் கர்ப்பிணிப் பசு உள்ளிட்ட இரண்டு பசுக்கள் கொல்லப்பட்டு, அவற்றில் ஒன்று இறைச்சியாக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புங்குடுதீவு மடத்துவெளி வயலூர் முருகன் ஆலயத்திற்கு அருகிலுள்ள காணியொன்றில், பிரதான வீதியிலிருந்து சுமார் 50 மீற்றர் தொலைவில் இந்த சம்பவம் இன்று(4.11.2026) இடம்பெற்றுள்ளது.
சினைப்பசு திருட்டு சம்பவம்
இதன்போது நிறைமாதக் கர்ப்பிணியான சினைப்பசு ஒன்றும் மற்றுமொரு பசுவும் கொல்லப்பட்டுள்ளன. குறிப்பாக சினைப்பசுவின் வயிற்றிலிருந்த முழுமையான உடலமைப்பைக் கொண்ட கன்றை வெளியே எறிந்துவிட்டு, பசுவை இறைச்சியாக்கியுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, பொதுமக்களின் நடமாட்டத்தைக் கண்ட குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் மற்றைய பசுவைக் கைவிட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தகவலறிந்த மடத்துவெளி J/23 கிராம அலுவலர் ச. சிறீதரன், மற்றும் பொதுநலன் விரும்பிகள் இணைந்து அங்கு இறைச்சியாக்கும் நோக்குடன் கட்டப்பட்டிருந்த பசுவை மீட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து ஊர்காவற்றுறை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி கே. வினோத்துக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்துக்குச் பொலிசார் சம்பவ இடத்தைப் பார்வையிட்டதுடன், விசாரணைகளையும் துரிதப்படுத்தினர்.
விசாரணைகளின் தொடர்ச்சியாக புங்குடுதீவு ஏழாம் வட்டாரம், ஊரதீவு பாணாவிடை சிவன் ஆலயத்திற்கு அருகிலுள்ள மீன் வாடியொன்றில் பொலிஸார் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
தப்பிய சந்தேகநபர்கள்
இதன்போது மாடுகளைப் பிடிப்பதற்குப் பயன்படுத்தப்படும் ஏராளமான கேபிள் கம்பிகளும், மாடுகளை வெட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் கத்திகளும் மீட்கப்பட்டுள்ளன. அங்கு நின்றிருந்த மூன்று இளைஞர்களில் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வேலணை துறையூரைச் 4ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த மற்றைய நபர் பொலிசாரால் கடுமையாக எச்சரிக்கப்பட்டு அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஆனாலும் குறித்த நபர் ஏன் அங்கு சென்றார் என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குறித்த மீன் வாடியின் உரிமையாளராக நயினாதீவைச் சேர்ந்த ஒருவர் செயற்பட்டு வருவதாகவும், அவர் புங்குடுதீவில் திருமணம் செய்துள்ள நிலையில், கைது செய்யப்பட்ட இருவரும் அவரது மகன்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் குறித்த நபர் என்பவர் கடந்த 2025ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி, புங்குடுதீவிலிருந்து மோட்டார் சைக்கிளில் மீன் கொண்டு செல்லும் பெட்டிக்குள் மறைத்து வைத்து 35 கிலோ மாட்டிறைச்சியைக் கடத்திச் சென்றபோது, வேலணை அராலிச் சந்தியில் ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.