மத்திய கிழக்கு பதற்றத்தினால் எரிபொருள் விலையில் ஏற்பட்ட தாக்கம்! அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் விலையில் ஏற்பட்ட தாக்கத்தை குறைக்க மேலதிக நிதி ஒதுக்கீடு இன்று (04) நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.
இன்று (04) நாடாளுமன்றில் கருத்து தெரிவிக்கும் போதே இதனை அறிவித்துள்ளார்.
எரிபொருள் விலை உயர்வின் தாக்கம்
இதற்கமைய, எரிபொருள் விலை உயர்வினால் மக்களுக்கு ஏற்படும் தாக்கத்தை குறைப்பதற்கும், 'அஸ்வெசும' பயனாளிகளுக்கு மேலதிக நிவாரணம் வழங்குவதற்கும் 47 பில்லியன் ரூபாய்க்கான மேலதிக ஒதுக்கீடு சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

குறித்த தொகையில் 41 பில்லியன் ரூபாய் வலுசக்தி அமைச்சின் செலவினத்திலும், 6 பில்லியன் ரூபாய் நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சின் செயல்பாட்டுத் திட்டத்தின் கீழ் 'அஸ்வெசும' திட்டத்திற்காகவும் ஒதுக்கிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அஸ்வெசும பயனாளிகளுக்கு நிவாரணம்
நுகர்வோருக்கு ஏற்படும் அழுத்தத்தை குறைக்க, ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய மூன்று மாதங்களுக்கும் இந்த 41 பில்லியன் ரூபாய் தொகை வழங்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதன்படி, 'அஸ்வெசும' திட்டத்தின் கீழ், மிக வறுமை பிரிவினருக்கு 6,250 ரூபாயும், வறுமை பிரிவினருக்கு 4,000 ரூபாயும் மேலதிக கொடுப்பனவாக இரண்டு தவணைகளில் செலுத்தப்படும் என்றும், இது ஒரு முறை மட்டுமே வழங்கப்படும் கொடுப்னவு என்றும் தெரிவித்துள்ளார்.
you may like this video