சவுக்கு சுறா மீன்களை பிடித்த இருவர் கைது
பிடிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ள மீன் வகையான சவுக்கு சுறா மீன்களை பிடித்து அவற்றை பேருவளை மீன்பிடி துறைமுகததிற்கு எடுத்து வந்த இரண்டு மீனவர்களை பேருவளை கரையோர பாதுகாப்பு படையின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
பேருவளை மீனவர்கள் கைது
இந்த மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற பேருவளை பிரதேசத்தை சேர்ந்த இரண்டு மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து அவர்கள் வந்த படகை சோதனையிட்ட போது அந்த படகில் இருந்து 40.1 கிலோ கிராம் எடை கொண்ட சவுக்கு சுறா மீன்களின் இரண்டு உடல் பகுதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபர்கள், பேருவளை மீன்பிடி பரிசோதகரின் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
உலகில் அருகி வரும் சவுக்கு சுறா மீன்
அருகி வரும் மீன் இனமான சவுக்கு சுறா மீன்களை பிடிக்க தேசிய நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் தடைவிதித்துள்ளது.
சவுக்கு சுறா மீன் இனம் உலகில் அழியும் அச்சுறுத்தலை எதிர்நோக்கி வருவதாக அரசசார்பற்ற நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.