நாட்டில் உயர்மட்ட மருந்தாளுநர்கள் இடமாற்றத்தால் பரபரப்பு!
தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகார சபையின் (என்.ஆர்.எம்.ஏ.) மிகவும் அனுபவம் வாய்ந்த மருந்தாளுநர்கள் 23 பேரைச் சுகாதார அமைச்சகம் இந்த வாரம் திடீரென வெளியேற்றியுள்ளது.
இதனையடுத்து மருந்து மற்றும் பாதுகாப்பு செயல்திறன் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள பெரும்பாலும் இளைய மருந்தாளுநர்கள் 26பேர் மட்டுமே ஈடுபட்டுள்ளனர்.
இந்தியத் தயாரிப்பு மயக்க மருந்தான 'ஸூபிவாக்-எச்'( Zupivac H) மருந்தைச் செலுத்தப்பட்ட இரண்டாவது நோயாளி ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை பேராதனை போதனா மருத்துவமனையில் இறந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த மருந்தாளுநர்களின் எதிர்பாராத இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
குறுகிய போராட்டம்
ஏற்கனவே இந்த மருந்துக்காரணமாகக் கர்ப்பிணிப் பெண் ஒருவர் இறந்ததாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன. இதனையடுத்தே கடந்த வாரம் பேராதெனியவில் பாடசாலை அதிபர் ஒருவர் இறந்துள்ளார்.
இந்தநிலையில் மருந்தாளுநர்கள் இடமாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் குறுகிய போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எதிர்ப்பு நடவடிக்கை
எனினும் இது நேற்றைய தினம் விலக்கிக்கொள்ளப்பட்டதுடன், பதிலளிப்பதற்காகச் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு ஏழு நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அவர் பதிலளிக்கத் தவறினால், ஏனைய சுகாதாரத் துறை தொழிற்சங்கங்களுடன் இணைந்து எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொள்ளப்போவதாக மருந்தாளுநர்கள் எச்சரித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |