அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ட்ரம்ப் பொற்காலம் எனப் புகழாரம் - பொருளாதார நெருக்கடியில் மக்கள்!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், 2026-ஆம் ஆண்டிற்கான தனது வருடாந்திர 'யூனியன் உரை'யை (State of the Union) நாடாளுமன்றத்தில் நிகழ்த்தியுள்ளார்.
சுமார் ஒரு மணி நேரம் 47 நிமிடங்கள் நீடித்த இந்தப் உரையில், அமெரிக்கா தற்போது தனது வரலாற்றின் "பொற்காலத்தில்" இருப்பதாக ட்ரம்ப் பெருமிதம் கொண்டுள்ளார்.
தனது ஆட்சியில் பணவீக்கம் குறைந்துள்ளதாகவும், பங்குச் சந்தை புதிய உச்சங்களை எட்டியுள்ளதாகவும், வரிச் சலுகைகள் மூலம் பொருளாதாரம் வலுவடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிள்ளையான் - சுரேஸ் சாலேவிற்கு வைக்கப்பட்ட இலக்கு! கைதின் பின்னணியில் உள்ள சதி.. கம்மன்பில பகிரங்க தகவல்
வெற்றிக் கதைகள்
உரையின் சுவாரஸ்யமாக, சமீபத்திய குளிர்கால ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அமெரிக்க ஆடவர் ஐஸ் ஹொக்கி அணியினரை அவைக்கு அறிமுகப்படுத்திய அவர், அந்த அணியின் கோல்கீப்பர் கானர் ஹெலபக்கிற்கு 'ஜனாதிபதி சுதந்திரப் பதக்கம்' வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

இருப்பினும், ட்ரம்பின் இந்த வெற்றிக் கதைகள் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள சாமானிய மக்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
விலைவாசி உயர்வு மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்கான செலவுகள் அதிகரித்துள்ளதால், பெரும்பான்மையான வாக்காளர்கள் அவர் மீது அதிருப்தியில் இருப்பதாகக் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
ஈரான் அணு ஆயுதம்
வெளியுறவுக் கொள்கையைப் பொறுத்தவரை, ஈரான் அணு ஆயுதம் பெறுவதை ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்று உறுதியளித்த ட்ரம்ப், யுக்ரைன் மற்றும் சீனா போன்ற முக்கிய விவகாரங்கள் குறித்து விரிவாகப் பேசாமல் தவிர்த்தார்.

ஜனாதிபதி உரை நிகழ்ந்த போது நாடாளுமன்ற அவையில் கடும் அரசியல் மோதல்களும் அரங்கேறின. ட்ரம்பின் குடியேற்றக் கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் உரையைப் புறக்கணித்தனர்.
அவையில் இருந்த உறுப்பினர் இல்கான் உமர், ட்ரம்பை நோக்கி நேரடி விமர்சனங்களை முன்வைக்க, கறுப்பின உறுப்பினர் அல் கிரீன் பதாகை ஏந்திப் போராட்டம் செய்ததால் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
எதிர்வரும் நவம்பர் இடைத்தேர்தலை இலக்காகக் கொண்டு ட்ரம்ப் இந்த உரையை நிகழ்த்தியிருந்தாலும், எதிர்க்கட்சியினர் இதனை "உழைக்கும் மக்களை ஏமாற்றும் செயல்" என்று கடுமையாகச் சாடியுள்ளனர்.