இன்று முதல் நடைமுறைக்கு வரும் வரிகள் : இலங்கைக்கு காத்திருக்கும் நெருக்கடி
இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 44% வரியை அமெரிக்கா விதித்துள்ள நிலையில் அது இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
இதன் காரணமாக இலங்கையின் ஆடை ஏற்றுமதியில் 40 சதவீதம் மற்றும் இறப்பர் ஏற்றுமதியில் 30 சதவீதம் அமெரிக்க சந்தைக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்தத் துறைகள் குறிப்பிடத்தக்க நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன.
இந்த வரிகள் காரணமாக, காலப்போக்கில் இலங்கை ஏற்றுமதி வருவாயில் 350 மில்லியன் முதல் 400 மில்லியன் டொலர் வரை இழக்க நேரிடும் என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
தொழில்துறையில் பாதிப்பு
இந்த பாதிப்புகள் முக்கியமாக இரண்டு வழிகளில் ஏற்படலாம். முதலாவது அமெரிக்கர்களின் கோரிக்கையில் இலங்கையின் உற்பத்திகளுக்கு வீழ்ச்சி ஏற்படலாம்.
இந்த வரிக் கொள்கை அமெரிக்காவில் ஆடைகள் போன்ற பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்ய நேரிடும். எனவே, அமெரிக்க நுகர்வோர் ஆடைகளை கொள்வனவு செய்வோரின் எண்ணிக்கையில் 10 சதவீதம் குறையும் சாத்தியம் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனால் இலங்கைக்கு ஆண்டுதோறும் 210 மில்லியன் டொலர் இழப்பு ஏற்படக்கூடும் என்று பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இரண்டாவது, இலங்கைக்கு கிடைக்க வேண்டிய ஆடை உற்பத்தி வாய்ப்புகள் ஏனைய நாடுகளுக்கு மாறி செல்லும்.
உற்பத்தி துறை
சில ஆடை ஒடர்களில் 15 சதவீதம் வரை பங்களாதேஷ், இந்தியா ஆகிய நாடுகளுக்கும் இது போன்ற உற்பத்தி துறைகளுக்கு குறைந்த வரி விகிதங்களைக் கொண்ட ஆபிரிக்க நாடுகளுக்கு திருப்பி விடப்படும் சாத்தியக்கூறு உள்ளது.
எனினும் இலங்கையின் ஆடை ஏற்றுமதியில் சுமார் 40 சதவீதம், மற்ற நாடுகளில் எளிதில் உற்பத்தி செய்ய முடியாத மிகவும் திறமையான தயாரிப்புகளாகும்.
எனவே, அந்த நிறுவனங்களின் தயாரிப்புகள் ஏனைய நாடுகளுக்கு மாற்றப்படுவதற்கு முன்பு இலங்கைக்கு 1.5 முதல் 2 ஆண்டுகள் வரை கால அவகாசம் வழங்கப்படும் என கருதப்படுகிறது.
இலங்கையின் தொழில்துறை பணியாளர்களில் சுமார் 15 சதவீதம் பேர் அரசாங்க துறையிலேயே பணிபுரிவதால், இந்த வரிகள் நீண்ட காலத்திற்குப் பராமரிக்கப்பட்டால், தொழிற்சாலை மூடல்கள், வேலை இழப்புகள் மற்றும் பெருநிறுவன இலாபக் குறைப்புக்கு வழிவகுக்கும்.
வர்த்தக இடைவெளி
இது முழுப் பொருளாதாரத்தையும் பாதிக்கலாம். நேர்மறையான பக்கத்தில், உலகளாவிய எண்ணெய் விலைகளின் சரிவு இலங்கைக்கு இறக்குமதி வரிகளில் 300 முதல் 500 மில்லியன் டொலர் வரை சேமிக்க உதவும், இதனால் இந்த வர்த்தக இடைவெளியை சமாளிக்க முடியும் என நம்பப்படுகின்றது.
எனவே, இந்த நிலைமை எதிர்காலத்தில் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதையும், வர்த்தக பேச்சுவார்த்தைகள் மூலம் சலுகைகள் அல்லது சமரசங்கள் எட்டப்படுமா என்பதையும் பொறுத்தே இலங்கையின் மீதான தாக்கம் இருக்கும் என்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.