வேலணை பிரதேச சபையினுள் அத்துமீறி நுழைந்த பசு! உரிமையாளர் போராட்டம்!
உரிமையாளரால் மேய்ச்சலுக்காக கட்டவிழ்த்து விடப்பட்ட பசு ஒன்று பிரதேச சபை வளாகத்துக்குள் நுழைந்து தாவரங்களை தின்று சேதமாக்கியதால் அந்த பசுவை பிரதேச சபையினர் சட்டத்தின்படி பிடித்து கட்டிவைத்த சம்பவம் யாழ். வேலணை பகுதியில் பதிவாகியுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வேலணை நகர்ப்பகுதியில் கால்நடை பண்ணை நடத்திவரும் பெண் உரிமையாளர் ஒருவர் பிரதேச செயலக நுழைபாதையை வழிமறித்து இன்று (9) ஆர்ப்பாட்டம் செய்ததால் அப்பகுதியில் சில மணிநேரம் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
பால் உற்பத்தி
வேலணை நகர்ப் பகுதியில் பால் உற்பத்தியை சுயதொழிலாகக் கொண்டு பசு மாடு வளர்ப்பில் ஈடுபட்டுவரும் பெண் ஒருவரது பசு கட்டவிழ்த்து விடப்பட்ட நிலையில், வேலணை நகர் பகுதியில் அமைந்துள்ள பிரதேச சபை வளாகத்துக்குள் நுழைந்து அங்கிருந்த சிறு தாவரங்களை சேதப்படுத்தியதாக கூறி பிரதேச சபையின் ஊழியர்கள் அந்த பசுமாட்டினை பிடித்து, முதற்கட்ட நடவடிக்கையாக உரிமையாளர் தேடி வரும் வரை சட்ட விதிமுறைகளுக்கேற்ப தமது பராமரிப்பில் வைத்திருந்துள்ளனர்.
@lankasrinews வேலணையில் தனது மாட்டினை மீட்க கொட்டும் மழைக்குள்ளும் போராடிய பெண்! #jaffna #news #srilanka #srilankanews #latestnews #latestnewsupdates #trandingnews #jaffna #velanai ♬ original sound - Lankasri News
இந்நிலையில் அந்த பசுமாட்டின் உரிமையாளர் இரண்டாவது நாளான இன்று பிரதேச சபையின் பொறுப்பில் பசுமாடு இருப்பதை அறிந்து, பிரதேச சபை சட்டத்துக்கு விரோதமாக பசுவினை பிடித்து கட்டிவைத்துள்ளதாக தெரிவித்து, பசுவை விடுவிக்குமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிதக்கப்படுகிறது.
மேலும், தான் மாடு வளர்ப்புத் தொழிலை பல இலட்சங்கள் முதலீடு செய்து மேற்கொண்டுவரும் நிலையில், தற்போது நிலவும் வெப்பமான காலநிலையை கருத்திற்கொண்டு மாடுகளின் நலன் கருதி, அவற்றை அவிழ்த்துவிட்டதாகவும் அவ்வாறான நிலையில், ஒரு பசு பிரதேச சபையின் வளாகத்துக்குள் சென்ற காரணத்துக்காக பிடித்து கட்டிவைக்கப்பட்டுள்ளது எனவும் அந்த பெண் கூறியுள்ளார்.
இது சட்டமுரணானது. இவ்வாறான செயற்பாடுகள் எமது தொழிலை பாதிக்கின்றன. எனவே, சட்டத்துக்கு முரணாக பிரதேச சபையால் பிடித்து வைக்கப்பட்டுள்ள பசு மாட்டை தண்டப் பணம் அறவிடாமல் விடுவிக்க வேண்டும் எனவும், இனியொரு முறை இவ்வாறு மாடுகள் பிடிக்கப்படக்கூடாது எனவும் கோரியே போராட்டத்தில் ஈடுபட்டதாக தொடர்ந்து அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வேலணை பிரதேச சபையின் செயலரிடம் கேட்டபோது, எமது பிரதேசத்தில் கால்நடைகளால் வருடாவருடம் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றன.
வளர்ப்பு மாடுகள்
கட்டாக்காலி மாடுகள் ஒருபுறமிருக்க வளர்ப்பு மாடுகள் கட்டவிழ்த்துவிடப்படுவதாலும் பிரச்சினைகள் நாளாந்தம் ஏற்படுகின்றன.
வளர்ப்பு பிராணிகளை கட்டி வளர்க்கவேண்டியது உரிமையாளர் ஒவ்வொருவரதும் பொறுப்பு. குறிப்பாக, வங்களாவடி சந்தி பகுதியை அண்டிய சூழலில் மாலை 6 மணிக்கு பின்னர் நாளாந்தம் 50க்கு மேற்பட்ட மாடுகள் வீதிகளில் தமது இரவு நேரத்தை கழிக்கின்றன.
இதனால் நாளாந்தம் விபத்துக்களும் ஏற்படுகின்றன. ஒருசில பாரிய விபத்துக்களும் ஏற்பட்டுள்ளன. இதேநேரம் வீட்டுப் பயிர்களை அழிப்பதாகவும் எமக்கு முறைப்பாடுகள் கிடைத்துவருகின்றன.
இவ்வீதியில் உறங்கும் மாடுகளில் அதிகமானவை வளர்ப்பு மாடுகளாகவே இருக்கின்றன. இதை கட்டுப்படுத்துமாறும் தொடர்ச்சியாக எமக்கு முறைப்பாடுகள் கிடைத்து வருகின்றன” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |