காசாவை இலக்கு வைத்த ட்ரம்பின் அறிவிப்பு! மத்தியக்கிழக்கில் கடும் எதிர்ப்பு
காசாவை சுத்தப்படுத்துவோம், பாலஸ்தீனியர்களை எகிப்து மற்றும் ஜோர்தானில் குடியமர்த்துவோம் என பரிந்துரைத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் திட்டமானது மத்தியகிழக்கில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளன.
காசாவில் இருந்து பாலஸ்தீனியர்களை வெளியேற்றும் திட்டத்தை ட்ரம்ப் முன்வைத்ததை தொடர்ந்து, எகிப்து மற்றும் ஜோர்தான் அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தது.
எனினும், இதற்கு இணங்க வேண்டும் என்று ட்ரம்ப் பகிரங்கமாக அறிவித்துள்ளார். இதன்படி ட்ரம்பின் முன்மொழிவு பரவலான கண்டனத்தைப் பெற்றுள்ளது.
இன அழிப்பு
இதன்படி விமர்சகர்கள் இதனை "இன அழிப்பு" மற்றும் "போர்க்குற்றம்" என்று தற்போது சுட்டிக்காட்டி வருகின்றனர்.
அரபு நாடுகளில் உள்ள பல நாடுகளும், பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளும் இந்த யோசனையை திட்டவட்டமாக நிராகரித்துள்ளன.
இந்நிலையில் தற்போது எகிப்து, ஜோர்தான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு இராஜியம், கட்டார், பாலஸ்தீன ஆணையம் மற்றும் அரபு நாடுகள் கூட்டமைப்பு ஆகியவை காசா மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள பாலஸ்தீனியர்களை தங்கள் பிரதேசங்களிலிருந்து வெளியேற்றும் எந்தவொரு திட்டத்தையும் ஏற்கபோவதில்லை என கூட்டு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளன.
பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மை
இவ்வாறான திட்டங்கள்"பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாகவும், மோதலை விரிவுபடுத்தும் அபாயமாகவும், அதன் மக்களிடையே அமைதி மற்றும் சகவாழ்வுக்கான வாய்ப்புகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தும்" என்று அரபு அறிக்கை மூலம் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய பாலஸ்தீனியர்கள் தங்கள் நிலத்தில் தங்குவதை உறுதி செய்வதற்கு அரபு கூட்டமைப்பு சர்வதேச நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |