தையிட்டி விகாரை காணி விவகாரம் குறித்து ஆளுநரின் கருத்தை ஏற்க முடியாது: கஜேந்திரகுமார் எம்.பி
சட்டவிரோதமான முறையில் கட்டப்பட்ட தையிட்டி விகாரை காணிக்கு பதிலாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்றுக்காணி வழங்கும் ஆளுநரின் கருத்தை ஏற்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam) தெரிவித்துள்ளார்.
நேற்று (31) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தலைமையில் யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஒருங்கிணைப்பு குழு விடயதானங்களில் தையிட்டி விகாரை தொடர்பான விடயம் பேசப்பட்டது.
இன ஒற்றுமை
இதன்போது, கருத்து தெரிவித்த கஜேந்திரகுமார், தமிழ், சிங்கள மக்களின் இன ஒற்றுமையை இந்த அரசாங்கம் எடுத்துக்காட்ட விரும்பினால் ஆரம்ப புள்ளியாக தையிட்டி சட்டவிரோத விகாரையை அகற்ற வேண்டும்.
இந்த விகாரை தனியார் மக்களுடைய காணிகளில் அடாத்தாக கட்டப்பட்ட ஒரு விகாரை. இந்த விபரம் தொடர்பில் பிரதேச செயலாளர் சம்பந்தப்பட்ட அமைச்சுகளுக்கு விவரம் வழங்கியுள்ளார்.
தற்போது மாற்றம் என்ற போர்வையில் ஆட்சிக்கு வந்த நீங்கள், தமிழ் சிங்கள உறவை இனவாதம் இல்லாமல் நோக்குகிறீர்கள் என்றால் சட்ட விரோதமாக கட்டப்பட்ட விகாரையை அகற்றுங்கள் என்றார்.
மாற்றுக்காணி
இதன்போது, கருத்து தெரிவித்த ஜனாதிபதி அது தொடர்பில் ஆராய்வோம் என கூறிய நிலையில், வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் குறித்த விகாரை அமைந்துள்ள காணிகளின் சொந்தக்காரர்களுடன் கலந்துரையாடி வருகிறோம்.
அவர்கள் மாற்றுக்காணியை வாங்குவதற்கு சம்மதம் தெரிவித்துள்ள நிலையில், அது தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்து வருகிறோம் என்றார்.
இதன்போது குறிக்கீடு செய்த நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆளுநரின் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
வேண்டுமென்றே தனியார் காணிகளில் விகாரையை கட்டிவிட்டு மக்களுக்கு மாற்றுக்காணியை வழங்குவதாக் கூறுவதை ஏற்க முடியாது, மக்களும் அதனை எதிர்பார்க்கவில்லை.
நாங்கள் மக்களுடன் போராடி வருகிறோம். மக்கள் அவ்வாறு காணியை கேட்கவில்லை. ஆளுநரின் கருத்தை ஏற்க முடியாது என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |