பதினான்கு மில்லியன் மோசடி தொடர்பில் மின்சார சபை உயரதிகாரிகள் மூவர் பணியிடை நீக்கம்
இலங்கை மின்சார சபையில் மேற்கொள்ளப்பட்டிருந்த பதினான்கு மில்லியன் ரூபா மோசடி தொடர்பில் சபையின் உயரதிகாரிகள் மூவர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
டெண்டர் செயற்பாடு ஒன்றில் இடம்பெற்றிருந்த பதினான்கு மில்லியன் ரூபா மோசடி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட முறையான விசாரணைகளின் பிரகாரம் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த 2023ஆம் ஆண்டில் நடைபெற்றிருந்த குறித்த நிதி மோசடி தொடர்பில் மின்சார சபையின் பிரதிப் பொதுமுகாமையாளரான பொறியியலாளர் நிஷாந்த படபெந்திகே என்பவருக்கு எதிராக 33 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தது.
பணியிடை நீக்கம்
அது தொடர்பான விசாரணையில் அவர் 31 குற்றச்சாட்டுகளுடன் தொடர்பிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து மின்சார சபையின் பணிப்பாளர் சபை முன்வைத்த பரிந்துரைகளின் பிரகாரம் அவர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அதே போன்று மின்சார சபையின் ஊடக முகாமையாளர் வஜிரபாணி பண்டாரநாயக்க என்பவருக்கு எதிராக 39 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
அவர் அதில் 34 குற்றச்சாட்டுக்களுக்கு குற்றவாளியாக கண்டறியப்பட்டுள்ளார். வாகன பயன்பாட்டு முறைகேடு மற்றும் சேமலாப நிதியத்தில் இருந்து பெற்றுக் கொண்ட கடன் தொடர்பில் மேற்கொண்ட மோசடிகள் தொடர்பில் மின்சார சபையின் மேலதிக நிதி முகாமையாள் துஷாரி திரிமாவிதானவும் பணிப்பாளர் சபையின் தீர்மானத்தின் பிரகாரம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |