செந்தில் தொண்டமானுக்கு எதிராக விசாரணைக்குழு: அளிக்கப்பட்ட விளக்கம்
புதிய இணைப்பு
முன்னாள் ஆளுநர் செந்தில் தொண்டமானின் செயற்பாடுகள் காரணமாக கிழக்கு மாகாணம் ஏனைய மாகாணங்களை விட ஒரு முன்னோடியான மாகாணமாக கடந்த காலங்களில் மாற்றப்பட்டது என செந்தில் தொண்டமான் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
செந்தில் தொண்டமானுக்கு எதிராக விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் விளக்கமளிக்கையிலேயே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் மேலும் கூறுகையில்,
“முன்னாள் ஆளுநர் செந்தில் தொண்டமானின் காலப்பகுதியில், கல்வித்துறையில் ஒன்பதாவது இடத்தில் இருந்த கிழக்கு மாகாணம் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியது.
கடந்த காலத்துடனான ஒப்பீடு
அதுமாத்திரமின்றி சுகாதார துறையில், டெங்கு காய்சலால் அதிகமாக பாதிக்கப்பட்ட மாகாணமாக அடையாளம் காணப்பட்ட கிழக்கு மாகாணம் செந்தில் தொண்டமானின் காலப்பகுதியில் மிக குறைந்தளவில் டெங்கு காய்ச்சலை கொண்ட மாகாணமாக மாற்றமடைந்து சுகாதார துறையில் முன்னேற்றம் கண்டது.
மேலும், 10 ஆயிரத்துக்கு அதிகமானவர்களுக்கு காணி ஒப்பனைகள், 2000 ஆசியர் நியமனங்கள், 15 வருட காலமாக உள்ளூராட்சி மன்றங்களில் ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு அமர்த்தப்பட்ட 900 பேருக்கு நிரந்தர நியமனம் முன்னாள் ஆளுநர் செந்தில் தொண்டமானால் வழங்கி வைக்கப்பட்டது.
இந்திய அரசிடம் இருந்து 2372 மில்லியன் அன்பளிப்பாக கிழக்கு மாகாணத்திற்கு பெற்றுக் கொடுத்தமை, உணவு பொருட்கள் பெற்றுக்கொள்வதற்கான இந்திய அரசிடமிருந்து 1 பில்லியன் டாலர் கடன் உதவி பெற்றுக்கொடுத்தமை, சுற்றுலா துறையை மேம்படுத்த சொகுசு கப்பல்களை திருக்கோணமலைக்கு போன்ற பல வேலைத்திட்டங்களை ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் முன்னெடுத்து வளர்ச்சியுற்ற மாகாணமாக கிழக்கு மாகாணம் காணப்பட்டது.
இவ்வாறு பல்வேறுபட்ட அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்ட முன்னாள் ஆளுநர் செந்தில் தொண்டமான், தமிழர்களின் தலைநகரமான திருகோணமலையில், பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழர்களின் பாரம்பரியத்தை உலகறிய செய்யும் வகையில் பொங்கல் விழாவை கொண்டாடி தமிழர்களின் இருப்பை நிலைநாட்டினார்.
அவர் கிழக்கில் இருந்து சென்று 5 மாதங்கள் நிறைவடைந்த நிலையில், கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில் கிழக்கில் பாரியளவு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவில்லை என்பது அவதானிக்க கூடியதாக உள்ளது.
செயலாளரை விசாரிப்பதே பொருத்தமானது
மேலும் நேற்றைய தினம் ஆளுநர் அலுவலகத்தால் கடந்த காலங்களில் முறைக்கேடுகள் இடம்பெற்றதா என்பது குறித்து ஆராய விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் ஊடகப்பிரிவு தெரிவித்திருந்தது. இலங்கையில் உள்ள 9 மாகாணங்களில் 8 மாகாணங்களில் இவ்வாறான அறிக்கையும் வெளியிடாத சூழ்நிலையில், கிழக்கில் வெளியிடப்படுவது தனிப்பட்ட ஒரு காழ்ப்புணர்ச்சியாக இருக்கும் என்பது சிந்திக்க கூடியதாக உள்ளது.
மேலும் ஆளுநர் அலுவலகம் கடந்த காலங்களில் திறனுடன் செயற்பட்ட ஆளுனர்களை பாராட்ட வேண்டும் என்ற அவசியம் இல்லாத போதிலும், தங்களின் தற்போதைய குறைகளை மறைப்பதற்கே இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவதாக மூத்த அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒரு மாகாணத்தின் நிதி நிறுவனத்தின் தலைவர், பிரதான செயலாளர் ஆவார். நிதி குற்றச்சாட்டுக்கள் அனைத்திற்கும் பிரதான செயலாளர் தான் பொறுப்பே தவிர ஆளுநரை கிடையாது என மூத்த அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அது சார்ந்த எவ்வித விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டாலும் ஆளுநரை விசாரிப்பது பொருத்தமானது அல்ல, பிரதான செயலாளரை விசாரிப்பதே பொருத்தமானது” என தெரிவித்துள்ளனர்.
முதலாம் இணைப்பு
கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுனர் செந்தில் தொண்டமான் நிர்வாகத்தின் கீழ் நடைபெற்ற ஊழல், முறைகேடுகளை ஆராய விசாரணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கிழக்கு மாகாணத்தின் தற்போதைய ஆளுனர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர, செந்தில் தொண்டமான் நிர்வாகத்தின் கீழ் நடைபெற்ற ஊழல், முறைகேடுகளை ஆராய மூன்று பேர் கொண்ட விசாரணைக்குழுவொன்றை நியமித்துள்ளார்.
பொருத்தமான சட்ட நடவடிக்கை
செந்தில் தொண்டமான் நிர்வாகத்தில் நடைபெற்ற ஊழல், முறைகேடுகள் தொடர்பில் தற்போது ஆளுனர் அலுவலகத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ள ஏராளம் முறைப்பாடுகள் மற்றும் எதிர்வரும் நாட்களில் கிடைக்கப்பெறவுள்ள முறைப்பாடுகள் என்பன குறித்த விசாரணைக்குழுவிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
அதன் பின்னர் முறைப்பாடுகளின் உண்மைத்தன்மை ஆராயப்பட்டு, பொருத்தமான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக தகவல் - அனதி
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |