வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்தவரும் அழைக்க வந்த உறவினரும் விமான நிலையத்தில் கைது
இலங்கை வந்த நபர் ஒருவர் நேற்று பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். சட்டவிரோதமாக குஷ் போதைப்பொருட்களை நாட்டிற்கு கொண்டு வந்த நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் அதிகாரிகள் குழுவொன்று சந்தேக நபரைக் கைது செய்துள்ளதுடன், அவர் கொண்டு வந்த 2 கிலோகிராம் குஷ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த சந்தேக நபர் நேற்று தாய்லாந்தின் பாங்கொக்கிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-403 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.
விமான நிலைய வரி
பின்னர் அவர் விமான நிலைய வரி இல்லாத வணிக வளாகத்திற்குச் சென்று மற்றொரு தொகுதி பொருட்களை வாங்கியது தெரியவந்துள்ளது.
இந்த நபர் மீது சந்தேகம் அடைந்த விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அவரை சோதனை செய்தபோது, அவர் கொண்டு வந்த பொருட்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.
அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட குஷ் போதைப்பொருளின் மதிப்பு 20 மில்லியன் ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டது.
விமான பயணம்
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஹங்வெல்ல பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவராகும். அவர் வழக்கமாக விமான பயணத்தில் ஈடுபடும் நபராகும்.
விமான நிலையத்திலிருந்து அவரை அழைத்துச் செல்ல வந்த உடுகம்பொல பகுதியை சேர்ந்த 31 வயதுடைய நபரும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.