நடிகை ஒருவருக்கு பணம் கொடுத்த விவகாரம்: ட்ரம்ப் கைது செய்யப்படலாம்!
தான் கைது செய்யப்படக்கூடும் என எதிர்பார்ப்பதாக அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை நாளை மறுதினம் (21.03.2023) நடக்கும் எனவும் இதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துமாறும் தனது ஆதரவாளர்களுக்கு ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.
அமெரிக்காவில் கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் நடந்தபோது, “ட்ரம்ப் தன்னுடன் நெருங்கிய உறவில் இருந்தார்” என்று பிரபல ஆபாசப் பட நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸ் தெரிவித்திருந்தார். இதை ட்ரம்ப் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
ட்ரம்ப் மீது வழக்கு
மேலும் தேர்தலின்போது இந்த தகவல் வெளியானதால், அதுபற்றி ஸ்டோர்மி டேனியல்ஸ் பேசாமல் இருக்க 1.30 இலட்சம் அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த பணம், பிரசார நிதியில் இருந்து சட்டவிரோதமாக வழங்கப்பட்டதாக ட்ரம்ப் மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில் நடிகைக்குப் பணம் கொடுத்ததாகக் கூறப்படும் வழக்கில் தான் எதிர்வரும் 21ஆம் திகதி கைது செய்யப்படவுள்ளதாக சமூக வலைத்தளத்தில் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
சட்ட நடைமுறை
அந்தப் பதிவில் ட்ரம்ப் தெரிவித்துள்ளதாவது, "நியூயோர்க் மன்ஹாட்டன் அரசு சட்டத்தரணி அலுவலகத்திலிருந்து வெளியான சட்ட விரோத தகவல் கசிவுகள், அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கான குடியரசு கட்சியின் முன்னணி வேட்பாளராக உள்ள முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் நாளை மறுதினமான செவ்வாய்க்கிழமை கைது செய்யப்படுவார் எனத் தெரிவிக்கின்றன" என்று கூறியுள்ளார்.
டொனால்ட் ட்ரம்பை கைது செய்து குற்றம்சாட்டுவதற்கான வாய்ப்பு உள்ளதால் அங்குச் சட்ட நடைமுறைக்கான அதிகாரிகள் பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.