சட்டவிரோத குடியேறிகள் விவகாரம்: மினியாபோலிஸில் ஆதிக்கம் செலுத்தும் ட்ரம்ப்
அமெரிக்கா - மினியாபோலிஸ் நகரில் சட்டவிரோதக் குடியேறிகளுக்கு எதிரான அதிரடி நடவடிக்கைகள் மற்றும் துப்பாக்கிச் சூடு சம்பவங்களால் ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணிக்கவும் ஜனாதிபதி ட்ரம்ப்பின் 'எல்லை சார்' விவகார அதிகாரி டொம் ஹோமன் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த(24) சனிக்கிழமை மினியாபோலிஸில் அமெரிக்கக் குடிமகனான அலெக்ஸ் ப்ரெட்டி (37) என்பவர் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இதுபோன்று, அமெரிக்கக் குடிமகன் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில், உள்நாட்டுப் பாதுகாப்பு செயலர் கிறிஸ்டி நோம் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படைத் தலைவர் கிரிகோரி போவினோ ஆகியோர் நடந்து கொண்ட விதம் கடும் விமர்சனத்துக்குள்ளானது.
இதனைத் தொடர்ந்து, எல்லைப் பாதுகாப்புப் படைத் தலைவர் கிரிகோரி போவினோ மற்றும் அவரது குழுவினர், மினியாபோலிஸ் நகரிலிருந்து வெளியேறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மினியாபோலிஸில் குடியேற்றக் கைதி ஒருவருக்கு, நீதிமன்றம் உத்தரவிட்ட காலக்கெடுவுக்குள் பிணை விசாரணை நடத்தப்படாதமை குறித்து நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
நீதிமன்ற உத்தரவு
இது குறித்து விளக்கம் அளிக்க, குடிவரவு மற்றும் சுங்க அமுலாக்கத் துறையின் (ICE) இடைக்கால பணிப்பாளர் டொட் லியான்ஸ், எதிர்வரும் வெள்ளிக்கிழமை நேரில் முன்னிலையாக வேண்டும் என்று ஃபெடரல் நீதிபதி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்தச் சிக்கல்களுக்கு மத்தியில், ஜனாதிபதி ட்ரம்ப்பின் நம்பிக்கைக்குரிய அதிகாரியான டொம் ஹோமன், குடியேற்றக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை முன்னின்று நடத்தவும், உள்ளூர் அதிகாரிகளுடன் ஆலோசனை வழங்கவும் மினியாபோலிஸ் வந்துள்ளார்.
இவரது வருகை அங்குள்ள புலம்பெயர்ந்தோர் மத்தியில் கூடுதல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.