கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைப்பது தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் சர்ச்சையான கருத்து
டென்மார்க்கின் தன்னாட்சிப் பகுதியான கிரீன்லாந்து தீவை அமெரிக்காவுடன் இணைப்பது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், மீண்டும் தீவிரமான கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
வெனிசுவேலாவில் அமெரிக்கா அண்மையில் நடத்திய ராணுவத் தலையீட்டைத் தொடர்ந்து, ட்ரம்பின் இந்த அறிவிப்பு ஐரோப்பிய நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிரீன்லாந்தின் இறையாண்மை
தேசியப் பாதுகாப்பு காரணங்களுக்காக அமெரிக்காவிற்கு கிரீன்லாந்து அவசியம் தேவை என்று ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
ரஷ்யா மற்றும் சீனாவின் கப்பல்கள் இப்பகுதியைச் சுற்றி இருப்பதால், பாதுகாப்பு ரீதியாக இது முக்கியத்துவம் வாய்ந்ததாக அவர் கருதுகிறார்.

எனினும் டென்மார்க் பிரதமர் மெட்டே ஃப்ரெடெரிக்சன், கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல என்றும், அமெரிக்காவின் இத்தகைய மிரட்டல்கள் 80 ஆண்டுகால நேட்டோ (NATO) கூட்டணியையே சிதைத்துவிடும் என்றும் எச்சரித்துள்ளார்.
வெனிசுவேலா ஜனாதிபதி நிகோலஸ் மதுரோவை அமெரிக்க ராணுவம் கைது செய்துள்ள நிலையில், அடுத்ததாக கிரீன்லாந்து மீதும் அமெரிக்கா நடவடிக்கை எடுக்கக்கூடும் என்ற அச்சம் ஐரோப்பிய தலைவர்களிடையே நிலவுகிறது.
பாரிஸில் நடைபெற்ற கூட்டத்தில் ஐரோப்பிய தலைவர்கள் இது குறித்து விவாதித்தனர். உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்காவின் ஆதரவு தேவை என்பதால், கிரீன்லாந்து விவகாரத்தில் அமெரிக்காவை நேரடியாகப் பகைத்துக்கொள்ள அவர்கள் தயங்குகின்றனர்.
எனினும், கிரீன்லாந்தின் இறையாண்மையை விட்டுக் கொடுக்க முடியாது என்பதில் டென்மார்க் உறுதியாக உள்ளது. ஒரு நேட்டோ நட்பு நாடான டென்மார்க்கிற்கு எதிராக அமெரிக்கா இத்தகைய அழுத்தத்தை கொடுப்பது, அந்த அமைப்பின் உறுப்புரை 5 (ஒருவர் மீது தாக்குதல் நடத்தினால் அனைவரும் இணைந்து எதிர்கொள்வது) என்ற விதியை கேள்விக்குறியாக்கியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |