தேர்தல் சட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் குறித்து மீளாய்வு
ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல் மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் மற்றும் குறித்த சட்டங்களின் ஏற்பாடுகளின் கீழான ஒழுங்குவிதிகள் மீளாய்வு செய்யப்படவுள்ளன.
தேர்தல்கள் தொடர்பான சட்டங்களை மீளாய்வு செய்து, நாடாளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பிலான முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதற்குமான நாடாளுமன்ற விசேட குழு அதன் தலைவர் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஏ.எச்.எம்.எச்.அபயரத்னவின் தலைமையில் அண்மையில் , நாடாளுமன்றத்தில் கூடியது.
தேர்தல் முறைமை
தேர்தல் முறைமை தொடர்பான சட்டம், அத்துடன் வாக்காளர்களைப் பதிவுசெய்யும் சட்டம், உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் கட்டளைச் சட்டம், , நாடாளுமன்ற தேர்தல்கள் சட்டம், ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பது தொடர்பான சட்டம், கடந்த காலங்களில் குறித்த சட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் மற்றும் குறித்த சட்டங்களின் ஏற்பாடுகளின் கீழான ஒழுங்குவிதிகள் என்பன இக்குழுவினால் மீளாய்வு செய்யப்படவுள்ளன.

அத்துடன் குழுவின் பணிகள் குறித்து பொதுமக்களின் கருத்தைப் பெறவும் இந்த மதிப்பாய்வு நடைமுறை பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டுவதற்கும் குழுவின் உறுப்பினர்கள் ஏகமனதாக இணக்கம் தெரிவித்துள்ளனர்.
இக்குழுக் கூட்டத்தில் பிரதியமைச்சர் (சட்டத்தரணி) சுனில் வட்டகல, நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, ஜே.சீ.அலவத்துவல, ஹர்ஷன ராஜகருணா, கதிரவேலு சண்முகம் குகதாசன், ருவன்திலக ஜயகொடி, (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்க, சந்திம ஹெட்டியாராச்சி ஆகியோரும் கலந்து கொண்டனர்.