லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தை நீக்குமாறு கோரிக்கை!
இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திசாநாயக்கவை பதவியிலிருந்து நீக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கோரிக்கை விடுத்துள்ளது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன தொடர்பான சட்ட நடவடிக்கைகளில், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் சட்டவிரோத நடத்தைகளில் ஈடுபட்டதாக பணிப்பாளர் நாயகம் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சட்டவிரோதமான முறையில் பிணையாளிகள் சமர்ப்பிக்கப்பட்டதாகக் கூறி, கபில சந்திரசேனவின் பிணையை ரத்து செய்யக் கோரி லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு நீதிமன்றத்தில் "சட்டவிரோத கோரிக்கை" ஒன்றை விடுத்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் குற்றம் சாட்டியுள்ளார்.

சந்திரசேனவுக்காக முதலில் ஆஜர்படுத்தப்பட்ட இரண்டு பிணையாளிகளை நீதிமன்றப் பதிவாளர் நிராகரித்ததாகவும், அதன் பின்னர் சட்டப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளக்கூடிய இருவர் ஆஜர்படுத்தப்பட்டு பிணை வழங்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
உண்மையான நிலைமை என்னவென்றால், முதல் இரண்டு பிணையாளிகள் நீதிமன்றப் பதிவாளரால் நிராகரிக்கப்பட்டனர். அதன்பின்னர், எந்தவொரு சட்டப் பிரச்சினையும் இல்லாமல் முறையான இருவரைப் பிணையாளிகளாக நிறுத்தியே கபில சந்திரசேன பிணை பெற்றார் என குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், நிராகரிக்கப்பட்ட பிணையாளிகளை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதாகத் தவறாகக் கருதி, கபில சந்திரசேனவை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு நீதிமன்றத்திடம் கோரியுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.
லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு நீதிமன்றத்தில் விடுத்துள்ள இந்தக் கோரிக்கை முற்றிலும் சட்டவிரோதமானது. ஒரு வழக்கில் வழக்குத் தொடுக்கும் தரப்பு , பிணையாளிகளின் தகுதி குறித்து இந்த அளவிற்கு ஆர்வம் காட்டுவதை நாம் இதற்கு முன் பார்த்ததே இல்லை என தெரிவித்துள்ளார்.
மேலும், லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் இதற்கு முன்னர் கபில சந்திரசேனவை மிரட்டியுள்ளதாக, சாகர காரியவசம் குற்றம் சுமத்தியுள்ளார்.
கபில சந்திரசேனவிடம் 'நீயாகத் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு உன்னை நெருக்குவோம்' என பணிப்பாளர் நாயகம் கூறியதாகத் தென்படுகின்றது என காரியவசம் தெரிவித்துள்ளார்.
எனவே, பணிப்பாளர் நாயகத்தின் இந்த நடத்தை குறித்து லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் மூன்று ஆணையாளர்களும் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்றும், ஒழுக்காற்று நடவடிக்கை அல்லது அவரைப் பதவியிலிருந்து நீக்குவது அவசியமா என்பது குறித்து நாடாளுமன்றத்திற்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
"உங்கள் அதிகாரத்தின் கீழ் உள்ள பணிப்பாளர் நாயகம் இந்த வழியில் சட்டத்தைத் துஷ்பிரயோகம் செய்திருந்தால், அது குறித்து விசாரித்து அவரை நீக்குமாறு நாடாளுமன்றத்திற்குப் பரிந்துரைக்க நீங்கள் ஏன் தயங்குகிறீர்கள்?" என சாகர காரியவசம் அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார்.