திருகோணமலையில் அமைதியான முறையில் நடைபெற்ற வாக்களிப்பு
திருகோணமலை மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்களிப்பு அமைதியான முறையில் இன்று(6) நடைபெற்றது.
இந்த மாவட்டத்தில், 13 உள்ளூராட்சி மன்றங்களுக்கு உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக காலை 7.00 முதல் வாக்களிப்பு ஆரம்பமானது.
இந்த மாவட்டத்தில், காலை 9.15 மணிக்கு 16.1 வீதமும், காலை 10 மணிக்கு 21.2 வீதமும் வாக்களிக்கப்பட்டதாக திருகோணமலை மாவட்ட உதவி தேர்தல் அத்தியேட்சகர் W. G. M. ஹேமந்தகுமார தெரிவித்தார்.
ஒரு மாநகர சபை, ஒரு நகர சபை மற்றும் 11 பிரதேச சபைகள் உட்பட மொத்தம் 13 உள்ளூராட்சி சபைகளுக்காக 221 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர்.
திருகோணமலை மாவட்டத்தில் 321 வாக்களிப்பு நிலையங்களும்,129 வாக்கெண்ணும் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்தல் கடமைகளை மேற்கொள்வதற்காக அரச உத்தியோகத்தர்கள் 3820 பேரும், பொலிஸ் உத்தியோகத்தர்கள் 1700 பேரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
திருகோணமலை, மூதூர், சேருவில ஆகிய தேர்தல் தொகுதிகளைக் கொண்ட, திருகோணமலை தேர்தல் மாவட்டத்தில் இம்முறை மொத்தமாக 319,399 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
திருகோணமலை மாநகர சபையில் 38,338 பேரும், திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபையில் 35,617 பேரும், குச்சவெளி பிரதேச சபையில் 29,540 பேரும், தம்பலாகமம் பிரதேச சபையில் 24,761 பேரும், சேருவில பிரதேச சபையில் 11,859 பேரும், வெருகல் பிரதேச சபையில் 9,840 பேரும், கந்தளாய் பிரதேச சபையில் 39,124 பேரும், மொரவெவ பிரதேச சபையில் 6,692 பேரும், பதவிசிரிபுர பிரதேச சபையில் 9,740 பேரும், மூதூர் பிரதேச சபையில் 50,671 பேரும், கிண்ணியா நகர சபையில் 29,131 பேரும், கிண்ணியா பிரதேச சபையில் 27,168 பேரும், கோமரன்கடவவெல பிரதேச சபையில் 6,692 பேரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப், கிண்ணியா ஜொஹரா உம்மா வித்யாலயத்தில், தனது வாக்கினை பதிவு செய்தார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக், கிண்ணியா ரீ. பி. ஜாயா மகளிர் மகா வித்தியாலயத்தில், தனது வாக்கினை செலுத்தினார்.
சண்முகம் குகதாசன் கருத்து
திருகோணமலையில் 90 சதவீதமான வாக்களிப்பு இடம்பெறும் என்பதுடன் தமிழரசு கட்சிக்கே அதிக ஆதரவு இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை தமிழ் மகாவித்தியாலயத்தில் தனது வாக்கினை பதிவு செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது உள்ளூராட்சி மன்ற தமிழரசுக் கட்சி வேட்பாளர்களும் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்தி - ரொஷான்
முதலாம் இணைப்பு
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் திருகோணமலை மாவட்டத்தில் இன்று செவ்வாய்க்கிழமை(6) காலை முதல் அமைதியான முறையில் இடம்பெற்று வருகின்றது.
கந்தளாயில் வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வருகை தந்து, தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.
திருகோணமலையில், 13 பிரிவுகளுக்கான உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.
இந்நிலையில், வாக்குச்சாவடிகளைச் சுற்றி பாதுகாப்புப் படையினர் பலத்த பாதுகாப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |