கிண்ணியா பிரதேச விவசாயிகளால் போராட்டம் முன்னெடுப்பு
கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட, கிண்ணியா மற்றும் குறிஞ்சாக்கேணி ஆகிய கமநல சேவை நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட, விவசாயிகள், தங்களுக்கான விவசாய நிலங்களில் பயிர் செய்வதற்கு, விதிக்கப்பட்ட தடையை நீக்கி, தொடர்ந்து விவசாயம் செய்வதற்கு அனுமதிக்குமாறு கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த போராட்டமானது, இன்று (25) இடம்பெற்றுள்ளது.
போராட்டம், கிண்ணியா பிரதேச செயலகத்துக்கு முன்னால், கிண்ணியா - கண்டி பிரதான போக்குவரத்து வீதியை மரித்து, நடாத்தப்பட்டதனால் போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்பட்டுள்ள நிலையில், சுமார் 30 நிமிடங்களாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
பல்வேறு கோரிக்கைகள்..
இதன்போது, விவசாய பூமி எங்களுடையது. எங்களுக்கு சொந்தமானதை இன்னொருவருக்கு தாரைவார்க்க முடியாது.
விவசாயிகள் நாம் ஒன்றுபடுவோம். விலை நிலத்தை மீட்டெடுப்போம். காலம் காலமாக பயிர் செய்த நிலத்தை நாம் மீட்டெடுப்போம். இந்த நிலம் எமது நிலம். அது வியர்வை சிந்தி உழைத்த நிலம். நாங்கள் பிறந்த எமது நிலம். நாங்கள் இறக்கும் எமது நிலம்.
நிறுவனம் கேட்டால் காணி நிலம். நாங்கள் கேட்டால் இழுத்தடிப்பு, நிறுவனங்களுக்கு லாபம், எங்களுக்கு சாபம் போன்ற சுலோகங்களை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதன் பின்னர், கிண்ணியா பொலிஸாரின் தலையீட்டினால் , போக்குவரத்து சீர் செய்யப்பட்டதோடு, விவசாயிகள் 12 பேருக்கு, பிரதேச செயலாளரை சந்திப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டு, விவசாயிகளும் பிரதேச செயலாளரும் கலந்துரையாடலில் ஈடுபட்ட போது ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது, கிண்ணியா மற்றும் குறிஞ்சாக்கேணி ஆகிய கமநல சேவை நிலைய அதிகாரிகளுக்கு, நீதிமன்றத்தின் கட்டளைக்கு இணங்க குறித்த பிரதேசங்களில் வேளாண்மை செய்வதற்கு அனுமதி அளிக்க வேண்டாம் என தான் அறிவித்ததாகவும், இதுவே எங்களுடைய பணி எனவும் விவசாயிகளுக்கு நாங்கள் ஒருபோதும் அவ்வாறு அறிவிக்கவில்லை எனவும் பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.
வழக்கு தாக்கல்
மேலும், உங்களுடைய பிரச்சினைகளை தனக்கு எழுத்து மூலமாக சமர்ப்பித்தால், மேலதிக நடவடிக்கைகளுக்காக, அதனை மேலதிகாரிகளுக்கு அனுப்பி வைப்பேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2023.10.09 திகதி கிண்ணியா பிரதேச கால்நடை வளர்ப்பாளர் சங்கத்தினால், தங்களுடைய காணிக்குள் அத்திமீறி விவசாயிகள் பயிர் செய்வதாக மேன் முறையீட்டு நீதிமன்றத்தில், வழக்கொன்றை தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கில் கிண்ணியா பிரதேச செயலாளர், மாவட்ட செயலாளர், தம்பலாகம பிரதேச செயலாளர் கிழக்கு மாகாண காணி ஆணையாளர், வனவள பாதுகாப்புத் திணைகள அதிகாரிகள் உள்ளிட்ட 11 அரச திணைக்கள தலைவர்கள் எதிர் மனுதாரர்களாக குறிப்பிடப்பட்டிருந்தனர்.
செம்பிமோட்டை, சுண்டிக்குளம், கல்லறப்பு, கல்லறப்பு, வாழைமடு, இரட்டைக்குளம், சொண்டங்காடு ஆகிய பிரதேசங்கள் மேய்ச்சல் தரைக்காக இந்த தீர்ப்பில் பெயரிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு கடந்த மே மாதம் 28ஆம் திகதி வெளியானது. இந்தத் தீர்ப்பின்படி, கிண்ணியா பிரதேச கால்நடை வளர்ப்புக்கு 2876 ஹெக்டேயர் நிலம் மேச்சல் தரைக்காக அடையாளப்படுத்திருப்பதாக மேன்முறையீட்டு தீர்ப்பளித்திருந்தது.
நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு அமைய, குறித்த பிரதேசங்களுக்குள், வேளாண்மை செய்யும் நடவடிக்கை முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளதால், உள்ளே எவரையும் அனுமதி விவசாயம் செய்வதற்கு அனுமதிக்க வேண்டாம் என பிரதேச செயலாளர் எம். எச். எம். கனி விவசாயத் திணைக்கள அதிகாரிகளுக்கு கடிதம் மூலம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.









