திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் : 4 தேரர்கள் உட்பட 10 பேருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
திருகோணமலை கடற்கரை பகுதியில் சர்ச்சைக்குரிய வகையில் புத்தர் சிலை பிரதிஷ்டை செய்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நான்கு பௌத்த தேரர்கள் உட்பட 10 சந்தேக நபர்களையும், எதிர்வரும் 19ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த உத்தரவானது இன்று (14.01.2026) பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், திருகோணமலை நீதவான் நீதிமன்ற நீதிபதி எம். என். எம். சம்சுதீன் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த கட்டளை பிறப்பிக்கப்பட்டது.
கரையோர பாதுகாப்பு திணைக்களம்
கடந்த 2025 நவம்பர் 16ஆம் திகதி, திருகோணமலை நகர கடற்கரை பகுதியில் பௌத்த பிக்குகள் மற்றும் ஒரு குழுவினர் திடீரென ஒன்றுகூடி, விகாரை ஒன்றை அமைப்பதற்காக அடிக்கல் நாட்டினர். அதனைத் தொடர்ந்து அங்கு புத்தர் சிலை ஒன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது.

கடற்கரை ஓரப்பகுதியானது கரையோர பாதுகாப்புத் திணைக்களத்திற்குச் சொந்தமானது என்பதாலும், அங்கு கட்டுமானங்களை முன்னெடுக்க எவ்வித சட்டபூர்வ அனுமதியும் பெறப்படவில்லை என்பதாலும், இச்செயற்பாடு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது குறித்து கரையோர பாதுகாப்பு திணைக்களம் மற்றும் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளைத் தொடர்ந்தே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த பகுதியில் விகாரை அமைப்பதற்கு நகரசபை அல்லது கரையோர பாதுகாப்பு திணைக்களத்திடம் எவ்வித முன் அனுமதியும் கோரப்படவில்லை என விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நவம்பர் மாதம் இந்தச் சம்பவம் இடம்பெற்ற போது, அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.
பிணைக்கோரிக்கையை நிராகரித்த நீதிபதி
இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தைப் பாதிக்கும் வகையில் இந்த நடவடிக்கை அமைந்துள்ளதாக சிவில் சமூக அமைப்புகள் சுட்டிக்காட்டியிருந்தன.

குறித்த இடம் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடமா என்பது குறித்து முன்னதாக பல்வேறு கருத்துக்கள் நிலவிய போதிலும், உரிய அனுமதியின்றி கடற்கரை எல்லைக்குள் எவ்வித கட்டுமானங்களையும் செய்ய முடியாது என அதிகாரிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
முன்னதாக இடம்பெற்ற வழக்கு விசாரணைகளின் போது, சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றவும், அப்பகுதியில் அமைதியை நிலைநாட்டவும் பொலிஸாருக்கு நீதிமன்றம் ஏற்கனவே அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய விசாரணையின் போது, கரையோர பாதுகாப்புச் சட்டத்தின் விதிகளை மீறியமை மற்றும் பொது அமைதிக்குத் பங்கம் விளைவித்தமை போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் பொலிஸார் விடயங்களைச் சமர்ப்பித்தனர்.
இதனையடுத்து, சந்தேக நபர்களின் பிணைக்கோரிக்கையை நிராகரித்த நீதிபதி, அவர்களைத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |