நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டும்: திருகோணமலை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தி ஊடக அறிக்கை
பலாங்கொடை கஸ்ஸப்ப தேரரினால் பிரதம நீதவான் தொடர்பில் ஊடகங்கள் வாயிலாக வெளியிடப்பட்ட கருத்துக்களுக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் திருகோணமலைக் கிளை கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் சங்கத்தினால் இன்று (13.11.2026) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும்,
நீதித்துறை அதிகாரி ஒருவர் தனது நீதித்துறைப் பணிகளை முன்னெடுக்கும் சூழலில், அவரைத் தனிப்பட்ட முறையில் இலக்குவைத்து வெளியிடப்படும் கருத்துக்கள் மிகவும் பொருத்தமற்றவை என்பதுடன், நீதித்துறையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையையும் பாதிக்கக்கூடியவை.
கடமைகளை நிறைவேற்றுவதற்கான சூழல்
ஜனநாயகத்தினதும் சட்டத்தின் ஆட்சியினதும் அடிப்படைத் தூண்களில் ஒன்றாக நீதித்துறையின் சுதந்திரம் காணப்படுகின்றது. நீதிபதிகள் எவ்வித அச்சுறுத்தல்கள், அரசியல் அழுத்தங்கள் அல்லது வெளித்தலையீடுகளுக்கும் உட்படாமல் சுதந்திரமாகவும் பக்கச்சார்பின்றியும் தமது கடமைகளை நிறைவேற்றுவதற்கான சூழல் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
அதேவேளை, கருத்துச் சுதந்திரம் அரசியலமைப்பால் உறுதிப்படுத்தப்பட்ட அடிப்படை உரிமையாகும். எனினும், நீதிமன்றத் தீர்ப்பொன்றை விமர்சிப்பதற்கும், நீதித்துறை அதிகாரியொருவரைத் தனிப்பட்ட முறையில் தாக்கி, அச்சுறுத்தி அல்லது அவரது அதிகாரத்தையும் கண்ணியத்தையும் சிறுமைப்படுத்தும் வகையில் கருத்து வெளியிடுவதற்கும் இடையில் தெளிவான வேறுபாடு காணப்படுவதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நீதிமன்றத் தீர்ப்புகள் தொடர்பான அதிருப்திகள் ஊடகப் பிரசாரங்கள் அல்லது தனிப்பட்ட தாக்குதல்கள் மூலம் வெளிப்படுத்தப்படாமல், மேன்முறையீடு உள்ளிட்ட சட்டரீதியான வழிமுறைகள் ஊடாகவே முன்வைக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமயத் தலைமைத்துவம், அரசியல் செல்வாக்கு, சமூக அந்தஸ்து அல்லது பொதுமக்களின் ஆதரவு எதுவாக இருந்தாலும் எவரும் சட்டத்திற்கு மேலானவர்கள் அல்லர்.

ஜனநாயகத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கு முரணானது
நீதித்துறையைப் பொதுமக்கள் அழுத்தம் மூலம் செல்வாக்குச் செலுத்த முயற்சிப்பது அரசியலமைப்பு ஜனநாயகத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கு முரணானது என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தனிப்பட்ட நீதித்துறை அதிகாரிகளை நியாயமான விமர்சனங்களிலிருந்து பாதுகாப்பது தமது நோக்கமல்ல என்றும், அனைத்து மக்களுக்கும் நீதியை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான நீதித்துறை நிறுவனத்தின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதே தமது பிரதான நோக்கம் என்றும் சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், நீதிவானை அச்சுறுத்தும், அச்சம் ஏற்படுத்தும் அல்லது நீதித்துறையின் அதிகாரத்தையும் கண்ணியத்தையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் நோக்கிலான பொதுக் கருத்துக்களைக் கண்டிப்பதாகவும், சம்பவத்தின் சூழ்நிலைகளை உரிய அதிகாரிகள் ஆராய்ந்து, அவசியமானால் சட்டத்திற்கு அமைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.
நீதித்துறையின் சுதந்திரம், சட்டத்தின் ஆட்சி மற்றும் ஒவ்வொரு குடிமகனினதும் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாப்பதில் தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.