திருகோணமலை மாவட்ட விவசாயக் குழுக்கூட்டம்
திருகோணமலை மாவட்ட விவசாயக் குழுக்கூட்டமானது மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம்.ஹேமந்த குமார தலைமையில் நேற்று (23) திருகோணமலை மாவட்ட செயலக புதிய ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.
கடந்த விவசாயக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாகவும், முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.
பிரச்சினைகளுக்கு தீர்வு
மாவட்ட ஒருங்கிணைந்த விவசாய அமைப்புகள், விவசாயிகளின் களநிலை பிரச்சினைகள் மற்றும் மாவட்ட செயலகத்துக்கு சமர்ப்பிக்கப்படட கடிதங்கள் கூட்டத்தின் ஆரம்பத்திலேயே கலந்துரையாடப்பட்டு தீர்வுகள் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் திருகோணமலை மாவட்டத்தின் விவசாய துறைசார்ந்த பல்வேறு பிரச்சினைகள் மற்றும் பிரதேச செயலக விவசாயக் குழுக்கூட்டத்தில் இருந்து மாவட்ட செயலகத்துக்கு முன்மொழியப்பட்ட பிரச்சனைகளும் கலந்துரையாடப்பட்டு தீர்வுகள் எடுக்கப்பட்டது.
செயற்பாட்டு குழு உருவாக்கம்
அத்துடன் தேசிய உர செயலகத்தின் மாவட்டத்திற்கான பிரதிப் பணிப்பாளர் எச்.ஜி.எஸ்.பிரேமரத்னவின் ஏற்பாட்டில் திருகோணமலை மாவட்டத்தின் 2025/26 பெரும் போகத்திற்கான உர விநியோகம் தொடர்பாகவும் முக்கியமாக கலந்துரையாடப்பட்டத்துடன் "food security" மற்றும் "Eka Mitata Govi Bimata" போன்ற தேசிய வேலைத் திட்டங்களுக்காக செயற்பாட்டு குழுக்களும் உருவாக்கப்பட்டன.
இக்கூட்டத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன், மாவட்ட நீர்ப்பாசனப் பொறியியலாளர், பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள்,விவசாய அமைப்பின் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


