சமூக ஊடகத் தடை தொடர்பில் பிரான்ஸ் ஜனாதிபதியின் அறிவிப்பு
15 வயதிற்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும் சட்டத்தை அடுத்த கல்வியாண்டு தொடங்கும் செப்டம்பருக்குள் அமல்படுத்த விரும்புவதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
இதற்கான சட்ட நடைமுறைகளை விரைவுபடுத்த தனது அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
எங்கள் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரின் மூளைகளும் உணர்ச்சிகளும் விற்பனைக்கு அல்ல என மக்ரான் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க தளங்களாலோ, சீன அல்கோரிதங்களாலோ கையாளப்படுவதற்கோ அல்ல என குறிப்பிட்டுள்ளார்.
15 வயதிற்குட்பட்டோருக்கு சமூக ஊடகங்களைத் தடை செய்யப்படும் எனவும் அதேபோல் உயர்நிலைப் பள்ளிகளில் கைப்பேசிகளுக்கும் தடை விதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இது இளைஞர்களுக்கும், பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும் தெளிவான விதியாக இருக்கும், என மக்ரோன் வலியுறுத்தியுள்ளார்.
சமூக ஊடகங்களால் குழந்தைகள் எதிர்கொள்ளும் மனநல மற்றும் சமூக பாதிப்புகளை கருத்தில் கொண்டு, மேற்கத்திய நாடுகள் பல இத்தகைய கடுமையான சட்டங்களை கொண்டு வர முயன்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, கடந்த டிசம்பரில் அவுஸ்திரேலியா 16 வயதிற்குட்பட்டோர் டிக்டாக், இன்ஸ்டாகிராம் மற்றும் முகநூல் உள்ளிட்ட சமூக ஊடக கணக்குகளை வைத்திருக்க தடை விதித்தது.
மக்ரோனின் அறிவிப்பு வெளியாகுவதற்கு சில நாட்களுக்கு முன், பிரிட்டன் அரசும் 16 வயதிற்குட்பட்டோருக்கு சமூக ஊடகப் பயன்பாட்டைத் தடை செய்வது உள்ளிட்ட பல நடவடிக்கைகளை பரிசீலித்து வருவதாக அறிவித்திருந்தது.
பிரான்ஸில் இந்த சட்ட முயற்சியை ஜனாதிபதி மக்ரோனின் ‘ரெனசான்ஸ்’ கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் லோர் மில்லர் முன்னெடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது சமூக ஊடகங்களில் எந்த உண்மையான வயது சரிபார்ப்பும் இல்லை. யாரும் வேண்டிய பிறந்த திகதியை உள்ளிட்டு கணக்கை உருவாக்க முடிகிறது என லோர் மில்லர் தெரிவித்துள்ளார்.