மொரவெவ பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது
திருகோணமலை-மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரொட்டவெவ பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபரொருவரை இன்று கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் அதே பகுதியை சேர்ந்த கஞ்சா நஸ்லிம் என்றழைக்கப்படும் ஜூனைதீன் சறூக் (38வயது) எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹொரவ்பொத்தானை-கோமரங்கடவல,மொரவெவ,புல்மோட்டை போன்ற பகுதிகளுக்கு ஹெரோயின் போதைப் பொருட்களை விற்பனை செய்து வருவதாக வலான போதைப்பொருள் மற்றும் மோசடி தடுப்புப் பிரிவினருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து குறித்த சந்தேக நபரின் கடையை சோதனையிட்ட போது அவரிடமிருந்து 40 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்தேகநபரை மொரவெவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும், திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.