அனுரவின் கூட்டத்தில் சனம் திரண்டாலும் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்: ஐக்கிய மக்கள் சக்தி
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் அனுர குமார திசாநாயக்கவின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் சனம் திரண்டாலும் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட கொள்கை பரப்புச் செயலாளர் எம். எம் மஹ்தி தெரிவித்துள்ளார்.
கிண்ணியாவில் இன்று(02.09.2024) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“எதிர்க்கட்சித் தலைவராக இருந்து ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுகின்ற சஜித் பிரேமதாச பாடசாலைகளுக்கு பேருந்துகளையும் ஸ்மார்ட் வகுப்பறைகளையும், வைத்தியசாலைகளுக்கு வைத்திய உபகரணங்களையும் பல்வேறு வேலை திட்டங்களை ஆக்கபூர்வமாக செய்து வந்திருக்கின்றார்.
எதிர்காலத்தில் நாடாளுமன்றத்தை நிர்வகிப்பதற்கு சிறந்த நிபுணத்துவம் கொண்ட புத்திஜீவிகள் குழு காணப்படுகின்றது.
ஆட்சியாளர்களால் கொள்ளையடிக்கப்பட்ட அரச சொத்துக்களை சட்ட நடவடிக்கையின் மூலம் மீட்டெடுப்பேன் எனும் அறைகூவலை சஜித் பிரேமதாச முன்மொழிகின்றார்.
எனவே வாக்களிக்கின்ற போது இந்த நாட்டை மீட்டெடுத்து உற்பத்தியை அதிகரித்து வளமான அபிவிருத்தியையும் நாட்டையும் உண்டாக்குவதற்கு சஜித் பிரேமதாசவை வெற்றி பெறச் செய்து ஜனாதிபதியாக நிலை நிறுத்த வேண்டும் என மக்களை கேட்டுக்கொள்கிறேன்.
எதிர்வருகின்ற 5ஆம், 6ஆம் திகதிகளில் நடைபெற இருக்கின்ற தபால் மூல வாக்களிப்பின் போது அரச ஊழியர்களும் அதிகாரிகளும் ஒரு இன, மத, குல பேதங்களுக்கப்பால் சிறந்த தலைவனாக மிளிருகின்ற சஜித் பிரேமதாசவுக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்.” என அவர் தெரிவித்துள்ளார்.