திருகோணமலை வைத்தியசாலை வாகன தரிப்பிடம் குறித்து பொதுமக்கள் கடும் அதிருப்தி!
திருகோணமலை பொது வைத்தியசாலையின் வாகன தரிப்பிடப் பகுதியில், முறையான அறிவித்தல் பலகைகளோ அல்லது பாதுகாப்பிற்கான உத்தரவாதமோ இன்றி தன்னிச்சையாகக் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் மத்தியில் பலத்த சர்ச்சை எழுந்துள்ளது.
மாநகர சபையினால் குத்தகைக்கு விடப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இந்த வாகன தரிப்பிடத்தில், துவிச்சக்கர வண்டிக்கு 20 ரூபாய், மோட்டார் சைக்கிளுக்கு 30 ரூபாய், முச்சக்கர வண்டிக்கு 50 ரூபாய் பணம் வசூலிப்பதோடு, தலைக்கவசம் (Helmet) தனியாகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளர்களைப் பார்ப்பதற்காக ஒரு நாளைக்கு மூன்று வேளைகள் வீதம், தொடர்ந்து 5 நாட்கள் வரும் ஒரு குடும்பத்தினர், வாகன தரிப்பிடத்திற்கு மட்டுமே பெருந்தொகை பணத்தைச் செலவிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
விழிப்புணர்வுப் பதாகை
பணம் வசூலிக்கும் குத்தகைதாரர்கள் வாகனங்களின் பாதுகாப்பிற்கு எந்தவித பொறுப்பையும் ஏற்பதில்லை என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
அத்துடன், இது தொடர்பான விழிப்புணர்வுப் பதாகைகளோ அல்லது வாகன தரிப்பிடத்தின் எல்லைகளோ கூட முறையாகக் காட்சிப்படுத்தப்படவில்லை என்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

"பொதுமக்களிடம் இருந்து பணத்தை வசூலிக்கும் போது அதற்கான உரிய சேவைகளும், வாகனங்களுக்கான பாதுகாப்பும் தடையின்றி வழங்கப்பட வேண்டும்.
எனவே, ஏழை எளிய மக்களைப் பாதிக்கும் இவ்வாறான சுரண்டல்கள் இனிமேலும் தொடராத வண்ணம், திருகோணமலை மாநகர சபை மற்றும் வைத்தியசாலை நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்படுகின்றது.