திருகோணமலை கடற்கரையில் சட்டவிரோத சிற்றுண்டிச்சாலை! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
திருகோணமலை கடற்கரையில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டதாகக் கூறப்படும் சிற்றுண்டிச்சாலைக்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று (21) திருகோணமலை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணையின்போது, வழக்குத் தொடுத்த நகராட்சி மன்றின் சார்பிலும், எதிர் தரப்பான சிற்றுண்டிச்சாலையின் உரிமையாளர் சார்பிலும் விரிவான சமர்ப்பணங்கள் முன்வைக்கப்பட்டன.
ஒத்திவைப்பு
சட்டவிரோத கட்டுமானம் குறித்த குற்றச்சாட்டுகள், கட்டுமான அனுமதி தொடர்பான விடயங்கள், மற்றும் கடற்கரை ஒழுங்கு விதிகள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து இரு தரப்பினரின் சமர்ப்பணங்களும் அமைந்திருந்தன.

இரு தரப்பினரதும் சமர்ப்பணங்களைக் கேட்டறிந்த நீதவான், முகம்மட் ஷரீப் சம்சுதீன் வழக்கின் மேலதிக விசாரணைகளுக்காகவும், அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளுக்காகவும், குறித்த வழக்கை எதிர்வரும் டிசம்பர் மாதம் 3ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
எதிர்கால நடவடிக்கை
பொதுமக்கள் அதிகம் கூடும் திருகோணமலை கடற்கரைப் பகுதியில், சட்டவிரோத கட்டுமானங்கள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் குறித்து நகராட்சி மன்றினால் தொடுக்கப்பட்டுள்ள இந்த வழக்கு, உள்ளூர் மக்களிடையேயும், வர்த்தகர்களிடையேயும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த வழக்கின் தீர்ப்பு, கடற்கரைப் பகுதியிலுள்ள ஏனைய கட்டுமானங்கள் மற்றும் வர்த்தகங்களின் எதிர்கால நடவடிக்கைகளுக்கும் ஒரு முன்னுதாரணமாக அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.