திருச்சியிலிருந்து புறப்பட்ட விமானம் அவசரமாக தரையிறக்கம்
புதிய இணைப்பு
இரண்டரை மணிநேர போராட்டத்துக்கு பின்னர் தமிழ் நாட்டின் திருச்சி மாவட்ட வானில் வட்டமடித்து கொண்டிருந்த விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளது.
இன்று இரவு 8.25 அளவில் இந்த விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளது. சுமார் 144 பயணிகளுடன் திருச்சி விமான நிலையத்தில் இருந்து துபாயின் சார்ஜாவுக்கு இன்று மாலை 5.40 மணிக்கு இந்த எயார் இந்தியா விமானம் புறப்பட்டது.
எனினும், இந்த ஏர் இந்தியா விமானத்தின் அடிப்பாகத்தில் உள்ள சக்கரம் உள்ளே செல்லாததால் அது பயணத்தை தொடராமல், வானில் வட்டமிட்டு வந்தது.
இந்தநிலையில், நிலத்திலிருந்து 4255 அடி உயரத்தில் கடந்த இரண்டு மணி நேரமாக வட்டமடித்து வந்த விமானத்தை மீண்டும் திருச்சி விமான நிலையத்திலேயே தரையிறக்க முடிவு செய்யப்பட்டது.
எனினும்,விமானத்தின் நிறையை குறைப்பதற்காக, அதில் உள்ள எரிபொருள் தீர்ந்து போகும் வரையில் வானில் வட்டமிட்ட நிலையில், விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
தமிழ்நாட்டின் திருச்சியில் இருந்து சார்ஜா புறப்பட்ட விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதன் காரணமாக அந்த விமானம் வானில் 2 மணி நேரத்திற்கு மேலாக வட்டமிட்டு வருகிறது.
குறித்த விமானம் இன்று (11) மாலை புறப்பட்ட நிலையில், அதன் சக்கரங்கள் உள்ளே செல்லவில்லை.
இதனையடுத்து,141க்கும் மேற்பட்ட பயணிகள் பயணிக்கும் இந்த விமானத்தின் எரிபொருள் தீர்ந்தவுடன் அதனை பாதுகாப்பாக தரை இறக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
தொழில்நுட்ப கோளாறு
மேலும், விமானம் நடுவானில் சென்ற போது திடீரென சக்கரங்கள் உள்ளே செல்லாததால் விமானத்தை மேலும் இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதை அடுத்தே எரிபொருள் தீர்ந்த பிறகு விமானத்தை தரையிறக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இதன் காரணமாக சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக விமானம் நடுவானில் வட்டமிட்டு வருகிறது.
பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான நோயாளர் காவு வாகனங்கள் விமான நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளன. விமானத்தை தரை இறங்குவதில் எந்த பிரச்சினையும் இல்லை எனவும் சிறிது நேரத்தில் பத்திரமாக விமானம் தரையிறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.