இளைஞனை தாக்கி காயப்படுத்திய கல்முனை நகை கடை வர்த்தகருக்கு பயணத்தடை
அம்பாறை (Ampara) - கல்முனையில் கட்டடம் ஒன்றினை நிர்மாணிப்பதில் ஏற்பட்ட முரண்பாட்டில் இளைஞனை தாக்கி காயப்படுத்திய நகைக்கடை வர்த்தகருக்கு பயணத்தடை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
குறித்த உத்தரவினை கல்முனை நீதிமன்றம் நேற்றையதினம் (03.06.2024) பிறப்பித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் புதிதாக கட்டடம் ஒன்றினை நிர்மாணிப்பதற்கு உரிய அனுமதியினையும் நடைமுறைகளையும் பின்பற்றி ஒரு சாரார் கட்டடம் ஒன்றினை நிர்மாணித்து வந்துள்ளனர்.
தொடர்ச்சியான அச்சுறுத்தல்
குறித்த கட்டடம் உரிய அனுமதி பெறாமல் கட்டப்படுகின்றது என குறிப்பிட்டு அருகில் உள்ள நகைக் கடை உரிமையாளர் ஒருவர் தனது குழுவுடன் தொடர்ச்சியாக தடை ஏற்படுத்தி புகைப்படம் எடுத்து அச்சுறுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை (30) மாலை கட்டடம் அமைத்து வந்த தரப்பினரின் சார்பில் அங்கு வேலை செய்கின்ற 18 வயது மதிக்கத்தக்க முஹம்மட் நசார் முகமட் ஆதிக் என்ற இளைஞன் நகைக்கடை உரிமையாளர் குழவினரால் தாக்கப்பட்டிருக்கின்றார்.
இதனையடுத்து, குறித்த தாக்குதலில் காயமடைந்த இளைஞன், கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
அத்துடன், தாக்குதலில் ஈடுபட்ட நகைக் கடை உரிமையாளர் என கூறப்பட்டு வரும் நபர் தானும் தாக்கப்பட்டதாக கூறி கல்முனை ஆதார வைத்தியசாலையின் 7ஆவது விடுதியில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
மேலதிக விசாரணைகள்
அவரின் நிலைமை பாரதூரமாக இல்லாத போதிலும் அந்த வைத்தியசாலையில் கடமையாற்றும் உறவினரான வைத்தியர் கடந்த கால காய நிலைமையை காட்டி கல்முனை தலைமையக பொலிஸாரின் விசாரணைகளுக்கு தடைகளை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டிருந்தார்.
இதனையடுத்து, கடந்த மாதம் 31ஆம் திகதி மாலை இளைஞனை தாக்கிய நகைக்கடைக்காரரை கல்முனை ஆதார வைத்தியசாலையில் வைத்து கைது செய்துள்ளனர்.
அத்துடன், நள்ளிரவில் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞனையும் அந்த இடத்திற்கு சென்ற கல்முனை நீதிமன்ற பதில் நீதிவான் அப்துல் ரசீட் முஹம்மது கலீல் பிணையில் செல்ல உத்தரவு பிறப்பித்திருந்தார்.
மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் வழக்கு தாக்கல் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் கல்முனை தலைமையக பொலிஸாரும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |