ஜெர்மனியில் போக்குவரத்து முடக்கம்: எதிர்வரும் நாட்களில் நாடு தழுவிய வேலைநிறுத்தம்
ஜெர்மனியில் ஊதியம் மற்றும் பணிச்சூழலை மேம்படுத்தக் கோரி, எதிர்வரும் 27 மற்றும் 28 ஆகிய திகதிகளில் நாடு தழுவிய உள்ளூர் போக்குவரத்து வேலைநிறுத்தத்திற்கு அந்நாட்டின் 'வெர்டி' (Verdi) பொதுத்துறை தொழிற்சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
சுமார் 100,000 பணியாளர்களை உள்ளடக்கிய 150 பேருந்து, டிராம் மற்றும் உள்ளூர் தொடருந்து நிறுவனங்களின் செயல்பாடுகள் இந்த வேலைநிறுத்தத்தால் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டு நாள் வேலைநிறுத்தம்
பெர்லின் மற்றும் ஹாம்பர்க் போன்ற முக்கிய நகரங்களும் இதில் அடங்கும். வேலை நேரம் குறைப்பு, இரவு மற்றும் வார இறுதிப் பணிகளுக்கான கூடுதல் கொடுப்பனவுகள் மற்றும் ஊதிய உயர்வு தொடர்பாக பல கட்டப் பேச்சுவார்த்தைகள் நடத்தியும் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாததால் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைநிறுத்தம் குறித்துப் பேசிய தொழிற்சங்கத்தின் துணைத் தலைவர் கிறிஸ்டின் பெஹ்லே, "பணியாளர்களின் பணிச்சூழலில் தீர்க்கமான முன்னேற்றங்களைக் கொண்டு வராமல், பொதுப் போக்குவரத்துச் சேவைகளை நீண்ட காலத்திற்குத் தொய்வின்றி நடத்த முடியாது என்பதை முதலாளிகள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை" என்று விமர்சித்துள்ளார்.
ஜேர்மனியின் 16 மாநிலங்களிலும் நிலவும் இந்தப் பணியாளர் பற்றாக்குறை மற்றும் பணிச் சுமையைக் குறைக்கப் பேச்சுவார்த்தைகள் விரைந்து முடிக்கப்பட வேண்டும் எனத் தொழிற்சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இந்த இரண்டு நாள் வேலைநிறுத்தம் காரணமாக ஜெர்மனி முழுவதும் போக்குவரத்து நெரிசலும், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.