தேர்தல் காலங்களில் பொது வளங்கள் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது பொது வளங்களை தவறாக பயன்படுத்துவதற்கு எதிராக ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேசனல் ஸ்ரீலங்கா கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இந்தநிலையில், அனைத்து குடிமக்களுக்கும் சொந்தமான பொது வளங்களின் பொறுப்பாளர்கள் மற்றும் அறங்காவலர்களாக அரச அதிகாரிகளின் முக்கிய பங்கை, நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் நடீசானி பெரேரா (Nadeeshani Perera) வலியுறுத்தியுள்ளார்.
அனைத்து குடிமக்களுக்கும் சொந்தமான வளங்கள் மீதான அதிகாரம் அரச அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அரசியல் பிரசாரங்கள்
இலங்கையில் உள்ள வளங்கள், பொது நிதியில் இருந்து இயற்கை வளங்கள் வரை அனைத்து அரச சொத்துக்கள் வரை இலங்கை மக்களுக்கும் குழந்தைகளுக்கும் சொந்தமானது என்று பெரேரா கூறியுள்ளார்.
மக்கள் பிரதிநிதிகள் இந்த வளங்களைப் பாதுகாக்கும் பணியை பொது அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
எனவே அவர்கள் பொதுமக்களின் நம்பிக்கையை நிலைநிறுத்துவதற்கான புனிதமான கடமையைக் கொண்டுள்ளனர் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது ஆட்சியில் இருப்பவர்கள் கூட தங்கள் அரசியல் பிரசாரங்களுக்கு அரச வளங்களை பயன்படுத்த முடியாது என்று அவர் வலியுறுத்தியுள்ளார்
அது ஒரு குற்றம், நம்பிக்கை மீறல் என அரசியல் சாசனத்தால் கூறப்பட்டுள்ளதை நினைவூட்டியுள்ள அவர், இந்த குற்றங்களுக்காக சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |