வவுனியாவில் பட்டா ரக வாகனத்துடன் தொடருந்து மோதி விபத்து: மூவர் காயம்
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற தொடருந்தானது வவுனியாவில் பட்டா ரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவமானது இன்று(1)மாலை 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கொழும்பில் இருந்து சென்ற தொடருந்து இன்று (01.09) மாலை 3.30 மணியளவில் வவுனியா - மன்னார் வீதி தொடருந்து கடவையை கடக்க முற்பட்ட போது அந்த வீதியால் வந்த பட்டாரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியது.
வைத்தியசாலையில் அனுமதி
குறித்த விபத்தில் பட்டாரக வாகனம் தொடருந்துடன் மோதி தூக்கி வீசப்பட்ட நிலையில் அதில் பயணித்த தாய், தந்தை, மகள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக குறித்த வீதிப் பகுதியில் சுமார் அரை மணி நேரத்திறகும் மேலாக தொடருந்து தரித்து நின்றமையால் வவுனியா - மன்னார் வீதிப் போக்குவரத்துக்கள் பாதிப்படைநதன.
மேலதிக விசாரணை
குறித்த தொடருந்து கடவைக்கு ஒலிச் சமிக்ஞை கிடைக்கப் பெறாமையால் தொடருந்து கடவை மூடப்பட்டிருக்கவில்லை எனவும் இதன் காரணமாகவே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



