மூதூரில் மஹாவலி கங்கையில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு!
திருகோணமலை - மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கங்குவேலி பகுதியில் மஹாவலி கங்கை ஆற்றில் மூழ்கி சிறுவன் ஒருவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவமானது இன்று(11.7.2026) காலை இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, உயிரிழந்த சிறுவன் இன்று காலை தனது குடும்பத்தினருடன் ஆற்றங்கரைப் பகுதிக்கு சமையல் தேவைக்காகச் சென்றுள்ளார்.
மேலதிக விசாரணை
இதன்போது, ஆற்றில் குளிப்பதற்காக சிறுவன் இறங்கிய நிலையில், எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி அலையினால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.
சிறுவன் நீரில் மூழ்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினரும் அங்கிருந்தவர்களும் உடனடியாக அவரை மீட்கப் போராடியுள்ளனர்.

எனினும், சிறுவனை உயிருடன் மீட்க முடியாமல் போயுள்ளது. நீண்ட தேடுதலின் பின்னர் சிறுவனின் சடலம் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக மூதூர் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து மூதூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.