கடந்த ஆட்சிகளில் நடத்தப்பட்ட சூழ்ச்சிகள்.. முக்கிய ஆவணங்களை தூசுதட்டும் அநுர அரசு
இலங்கையின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செயல்முறைகளில் இடம்பெற்ற கடந்தகால மோசடிகள் மற்றும் அத்துமீறல்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக அரசாங்கம் அவற்றை மீளாய்வு செய்து வருவதாக வர்த்தக மற்றும் வாணிப அமைச்சு தெரிவித்துள்ளது.
நிதி மற்றும் பாதுகாப்பு அமைச்சுகள் உட்பட பல அமைச்சுகள் ஒன்றிணைந்து இதற்கான கூட்டமைப்பு பொறிமுறையின்கீழ் செயல்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இது குறித்து ஊடகமொன்றுக்குக் கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர் ஆர்.எம். ஜெயவர்தன,
"இறக்குமதி ஏற்றுமதி மோசடிகளுக்கு எதிராக நேரடியாக நடவடிக்கை எடுக்கும் பொறிமுறை தமது அமைச்சிடம் இல்லாத போதிலும், ஏனைய அமைச்சுகளுடன் இணைந்து ஊழல்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன” என குறிப்பிட்டுள்ளார்.
கடுமையான எச்சரிக்கை
அத்துடன், இவ்வாறான சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கப்பட்ட உரிமங்களை இரத்து செய்வது உட்பட கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

நீண்டகாலமாக இடம்பெற்று வரும் வரி ஏய்ப்பு, தவறான விலை விபரங்களைச் சமர்ப்பித்தல் (Trade Misinvoicing) போன்ற சர்வதேச வர்த்தக முறைகேடுகளைத் தடுத்து, உரிமங்களை வழங்கும் முறையைச் சரியாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதாரம் மற்றும் அந்நியச் செலாவணி வருவாய்க்கு இறக்குமதி - ஏற்றுமதி துறை மிகவும் முக்கியமானது என்பதால், வெளிப்படைத்தன்மையைப் பேண அரசாங்கம் இந்த முக்கிய தீர்மானத்தை எடுத்துள்ளது.