மட்டக்களப்பு எரிபொருள் நிலையத்தில் இடம்பெறும் மோசடி: ஏமாற்றத்தில் மக்கள் (Video)
மட்டக்களப்பில் எரிபொருள் நிலையமொன்றில் சட்டவிரோத எரிபொருள் விநியோகம் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கபட்டுள்ளது.
மட்டக்களப்பு - வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தனியாருக்கு சொந்தமான அவசர தேவைக்கென ஒதுக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையத்திலேயே இவ்வாறான முறைகேடான செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கபட்டுள்ளது.
தற்போதைய நிலை
மட்டக்களப்பில் அவசர தேவைக்கென 18 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் வாழைச்சேனை மற்றும் ஓட்டமாவடியில் தலா ஒன்றுக்கு அனுமதி வழங்கப்பட்டு காணப்படுகின்றது.
வாழைச்சேனை பொலிஸ் நிலையம் முன்பாக உள்ள தனியாருக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அத்தியாவசிய தேவைக்கு அனுமதி பெற்றவர்களுக்கு எரிபொருள் வழங்குவது குறைவாக காணப்படுவதாக தெரிவிக்கபட்டுள்ளது.
மதகுருமார்கள் மற்றும் கர்ப்பினி பெண்களை வைத்தியசாலைக்கு ஏற்றி செல்லும் வாகனத்திற்கு கூட எரிபொருள் வழங்காமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கல்குடா பிரதேசத்திலுள்ள ஊடகவியலாளர்கள் தங்களது சேவையை மேற்கொள்வதற்கு மக்களிடம் சென்று பிரச்சனைகளை கேட்டறிந்துகொள்ள பெட்ரோல் இல்லாமல் இருந்துள்ளது.
இதனையடுத்து பிரதேச செயலாளரிடம் அனுமதிக் கடிதமொன்றினை பெற்று நேற்று(25) சனிக்கிழமை வழங்கிய போது இன்று (26) ஞாயிற்றுக்கிழமை காலை வருமாறு நிரப்பு நிலையத்தினர் கூறியுள்ளனர்.
இந்நிலையில் நிரப்பு நிலையத்திற்கு இன்று காலை ஊடகவியலாளர்கள் சென்றபோது குறித்த அனுமதிக் கடிதத்தினை தூக்கி எறிந்துள்ளனர்.
பெட்ரோல் முடிந்ததாக கூறப்பட்ட நிலையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள், நிரப்பு நிலையத்தினருக்கு நெருங்கியவர்கள், வாழைச்சேனையில் உள்ள பல்பொருள் வர்த்தக நிலைய வாகனம் என்பவற்றிக்கு பாதுகாப்பு பிரிவினரின் முன்னிலையில் எரிபொருள் வழங்கப்பட்டுள்ளது.
அந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தங்களுக்கு தேவையானவர்களுக்கு மாத்திரம் எரிபொருள் வழங்குவதுடன், அங்கு கடமையாற்றுபவர்கள் வரும் மக்களுக்கு தகாத வார்த்தை பிரயோகங்களை பயன்படுத்துவது தினமும் இடம்பெற்று வருகின்றது.
தீர்வு
மட்டக்களப்பு பெட்ரோலியக் கூட்டுத்தாபன அதிகாரிகள் நிரப்பு நிலைங்களுக்கு சென்று பரிசோதனைகள் மேற்கொள்வதில்லை என்றும், கண்டு கொள்வதில்லை என்றும் கூறப்படுகின்ற நிலையில் மக்கள் பெரும்பாலும் மன உளைச்சலுக்கு ஆளாகி செல்வதாக தெரிவிக்கபடுகின்றது.
செயலக உத்தியோகத்தர்கள் கடமை நாட்களின் குறித்த பகுதியில் நிற்கும் சமயத்தில் மாத்திரம் சற்று ஒழுங்காக விநியோகம் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எனவே வாழைச்சேனையிலுள்ள தனியாருக்கு சொந்தமான நிரப்பு நிலையத்தில் இடம்பெறும் அநீதிக்கு ஒரு தீர்வு கிடைக்க அரசியல்வாதிகள் மற்றும் முறையான அரச அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.