ஒலிம்பிக்கில் இலங்கையின் தேசிய கீதம் ஒலிக்க வேண்டும் என்பதே எனது கனவு! ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் தரங்க
உலகின் முதல்நிலை ஈட்டி எறிதல் வீரரான இலங்கையை சேர்ந்த ருமேஷ் தரங்க, 2028 லொஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்று இலங்கையின் தேசிய கீதத்தை ஒலிக்கச் செய்வதே தனது மிகப்பெரிய இலட்சியம் எனத் தெரிவித்துள்ளார்.
கொழும்பின் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நம்பிக்கை
தனது வெற்றிக்குப் பின்னால் கடின உழைப்பு, தியாகம் மற்றும் பலரின் ஆதரவு இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், இந்தியாவின் நீரஜ் சோப்ரா மற்றும் பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் ஆகியோரின் சாதனைகள், தெற்காசிய வீரர்களுக்கும் உலகத் தரத்தில் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியதாகத் தெரிவித்தார்.
இலங்கையில் தடகள விளையாட்டை மேம்படுத்த முறையான விளையாட்டு மைதானங்கள் மற்றும் பயிற்சி வசதிகள் அவசியம் என வலியுறுத்திய அவர், ஒவ்வொரு மாகாணத்திலும் தரமான தடகளப் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும், அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் தம்மைவிடச் சிறந்த ஈட்டி எறிதல் வீரர் ஒருவரை இலங்கை உருவாக்க முடியும் என நம்பிக்கை வெளியிட்டார்.
முக்கிய பங்கு
இலங்கை இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவை, வீரர்களுக்கு வேலைவாய்ப்பையும் பயிற்சிக்கான ஆதரவையும் வழங்குவதன் மூலம் நாட்டின் தடகளத்துறையைத் தக்கவைத்துக் கொள்வதில் முக்கிய பங்காற்றுவதாகவும் அவர் தெரிவித்தார்.
தாம், விளையாட்டிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் இளம் வீரர்களை உருவாக்குவதற்குப் பங்களிக்க விரும்புவதாகவும் கூறினார். 2028 ஒலிம்பிக்கில் இலங்கைக்காகத் தங்கப் பதக்கம் வென்று நாட்டுக்குப் பெருமை சேர்ப்பதே தனது அடுத்த இலக்கு என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.