இலங்கையின் கிழக்கே வங்காள வளைகுடா கடல் பகுதியில் கொந்தளிப்பு! பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
புதிய இணைப்பு
இலங்கையின் கிழக்கே வங்காள வளைகுடா கடல் பகுதியில் நிலவும் கொந்தளிப்பான வானிலை காரணமாக எதிர்வரும் 14, 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் மழைப்பொழிவு அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களதின் பணிப்பாளர் மெரில் மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேற்கு மற்றும் மேற்கு மாகாணங்களில் மழைப்பொழிவு அதிகரிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை
இன்று (12 ஆம் திகதி) மாலையிலும், நாளை (13 ஆம் திகதி) நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை தொடர வாய்ப்புள்ளதாகவும், மத்திய, சபரகமுவ, மேற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 100 மி.மீ-க்கு மேல் கனமழை பெய்யக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கிழக்கே வங்காள விரிகுடா கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வுநிலை, நாளை (13ஆம் திகதி) தாழ்வு காற்றழுத்த பகுதியாக உருவாக வாய்ப்புள்ளது என்றும், எனவே இந்த அமைப்பின் தாக்கம் நாளை முதல் 16ஆம் திகதி வரை அடுத்த சில நாட்களுக்கு நாட்டை பாதிக்கும் என்றும் கூறியுள்ளார்.
இந்த தாழ்வு காற்றழுத்த பகுதி மேலும் வலுப்பெற்று, ஒரு காற்றழுத்த தாழ்வு நிலையாகவும், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாகவும் மாறி, நாட்டின் கிழக்கு கடற்கரைக்கு இணையாக இந்தியாவின் ஆந்திர பிரதேச கடற்கரையை நோக்கி நகர்வதற்கு அதிக வாய்ப்புள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அமைப்பு வங்காள விரிகுடா கடல் பகுதியில் உருவாகி வருவதால் கடல்சார் சமூகத்தினரைப் பாதிக்கக்கூடும். எனவே வரவிருக்கும் வானிலை முன்னறிவிப்புகளில் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
முதலாம் இணைப்பு
நாட்டின் பல பகுதிகளில் இன்று (12) பிற்பகல் வேளையில் 100 மி.மீ க்கும் அதிக அளவிலான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில்100 மி.மீ க்கும் அதிக அளவிலான பலத்த மழை பெய்யக்கூடும் என திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இடி, மின்னலுடன் கூடிய மழை
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடி, மின்னலுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என திணைக்களம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குக்குப் பின்னர் மழையோ அல்லது இடிமின்னலுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் அனர்த்தங்களை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களின் சில இடங்களிலும் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடல் பகுதிகள் கொந்தளிப்பு
இதேவேளை நாட்டைச் சுற்றியுள்ள கடல் பிரதேசங்களில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசுவதுடன், காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 20-30 கி.மீ வரை காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை மற்றும் புத்தளம் ஊடாக கொழும்பு வரையான கடலோரத்திற்கு அப்பாலுள்ள கடல் பிரதேசங்களில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 45 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும்.
குறித்த கடல் பகுதிகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாக காணப்படும். இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அக் கடல் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று மணித்தியாலத்திற்கு 60-70 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.