லாஃப்ஸ் எரிவாயு நுகர்வோருக்கு மகிழ்ச்சி செய்தி: நுகர்வோருக்கு நன்றி கூறும் நிறுவனம்
அண்மைய நாட்களாக தட்டுப்பாடாக காணப்பட்ட லாஃப் எரிவாயு சிலிண்டர்கள் மீள விநியோகம் செய்யப்பட உள்ளதாக லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
3,000 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான திரவ பெட்ரோலிய எரிவாயுவை ஏற்றிய கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளதாகவும், எரிவாயு சிலிண்டர் விநியோகத்தைக் கட்டம் கட்டமாக மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.
அண்மையில் ஏற்பட்ட விநியோகத் தடையைத் தொடர்ந்து, எரிவாயு விநியோகத்தை வழமைக்குக் கொண்டுவரும் நோக்கில் கப்பல் ஒன்று எரிவாயுத் தொகையுடன் இலங்கையை வந்தடைந்துள்ளது.

கப்பலிலிருந்து எரிவாயு இறக்கப்பட்டவுடன், சிலிண்டர்களில் எரிவாயுவை நிரப்பும் பணிகளை ஆரம்பித்து, தனது விநியோகஸ்தர்கள் மற்றும் முகவர் வலையமைப்பு ஊடாக விநியோகத்தை முன்னெடுக்கவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
உள்ளூர் விற்பனை நிலையங்களுக்கு சிலிண்டர்கள் சென்றடைவதன் மூலம், சந்தையில் எரிவாயு கிடைப்பது படிப்படியாக வழமைக்குத் திரும்பும் என நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
எரிவாயுவைப் பெற்றுக்கொள்வதில் நுகர்வோர் எதிர்கொண்ட சிரமங்களைப் புரிந்துகொள்வதாகத் தெரிவித்துள்ள லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம், நுகர்வோரின் பொறுமைக்கு நன்றியையும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, விற்பனை நிலையங்களுக்குச் செல்வதற்கு முன்னதாக, தமக்கு அருகிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட லாஃப்ஸ் எரிவாயு முகவரிடம் எரிவாயு கையிருப்பு உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு அல்லது 1345 என்ற இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி விபரங்களை அறிந்து கொள்ளுமாறு நுகர்வோர் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.