காய்ச்சல் மற்றும் தலைவலி உள்ளவர்களுக்கான அவசர அறிவுறுத்தல் - உடன் சிகிச்சை பெறுமாறு வலியுறுத்தல்
பருவமழை மற்றும் ‘பெரும்போக’ பயிர்ச்செய்கைப் பருவம் ஆரம்பித்துள்ளதால் நாடளாவிய ரீதியில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த ஆண்டில் இதுவரை சுமார் 7000 நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், ஆண்டுதோறும் சுமார் 300 பேர் இந்த நோயால் உயிரிழப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி, கேகாலை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
மாசடைந்த நீர் மற்றும் சேற்றின் ஊடாக பரவும் நோய்
எலிகள் மற்றும் ஏனைய விலங்குகளின் சிறுநீரால் மாசடைந்த நீர் அல்லது சேற்றின் ஊடாக இந்த நோய் மனிதர்களுக்குப் பரவுகிறது.

எனவே, விவசாயிகள் மற்றும் சேறு, வெள்ளநீர் பகுதிகளில் பணியாற்றுவோர் ரப்பர் காலணிகள், கையுறைகள் அணிவதுடன், உடலில் உள்ள காயங்களை நீர்ப்புகாத கட்டுகளால் மூடிக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மருத்துவ ஆலோசனை
விவசாயப் பணிகளில் ஈடுபடுவதற்கு முன்னர் மருத்துவ ஆலோசனையுடன் தடுப்பு மருந்துகளைப் பெற்றுக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காய்ச்சல், கடுமையான தலைவலி, தசைவலி, கண்கள் சிவத்தல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுமாறும், சுயமாக மருந்துகளை உட்கொள்ள வேண்டாம் என்றும் சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
ஆரம்பத்திலேயே நோயைக் கண்டறிந்து சிகிச்சை பெறுவது உயிரிழப்புகளையும், கடுமையான பாதிப்புகளையும் தவிர்க்க உதவும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கையின் கிழக்கே வங்காள வளைகுடா கடல் பகுதியில் கொந்தளிப்பு! பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை