மன்னாரிலும் பயணத்தடை தற்காலிகமாக நீக்கம் - பொருட்கள் கொள்வனவில் ஆர்வம் காட்டும் மக்கள்
நாட்டில் ஏற்பட்டுள்ள கோவிட் வைரஸ் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் வகையில் நாடளாவிய ரீதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 11 மணி முதல் அமுல்படுத்தப்பட்ட பயணத்தடை இன்று அதிகாலை 4 மணிக்கு தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மீண்டும் இன்று இரவு 11 மணிமுதல் எதிர்வரும் 7ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை பயணத்தடை அமுல்படுத்தப்பட உள்ளதுடன் எதிர்வரும் 31ஆம் மற்றும் 4ஆம் திகதிகளிலும் பயணத்தடை தற்காலிகமாக நீக்கப்பட உள்ளது.
இவ்வாறான நிலையில் மக்கள் தமக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய இன்றைய தினம் மன்னார் நகர் பகுதிகளிலுள்ள வர்த்தக நிலையங்களிற்கும் வருகை தந்துள்ளனர்.
மக்கள் சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக நடமாடுவதற்கு பொலிஸாரும், இராணுவமும் அனுமதி வழங்கி உள்ளனர். மேலும் வீதிகளில் கூட்டம் கூட்டமாக நடமாடுபவர்கள் பாதுகாப்பு தரப்பினரால் எச்சரிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளனர்.
அரச தனியார் போக்குவரத்துச் சேவைகள் இடம்பெறவில்லை என்ற போதும் மக்கள் தமக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டியுள்ளனர்.
அத்தியாவசிய பொருட்கள் விற்பனை நிலையங்களை தவிர ஏனைய வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மேலும் பயணத்தடை காரணமாக தமது தொழில் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாத நிலையில் மன்னார் மாவட்டத்தில் உள்ள கூலித்தொழிலாளர்கள், பெண் தலைமைத்துவ குடும்பங்கள் மற்றும் சிறு மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க அதிகாரிகள் துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.








