பாகிஸ்தான் பொலிஸாரின் தவறான துப்பாக்கிச் சூடு: அவுஸ்திரேலிய சிறுமி பரிதாப பலி
பாகிஸ்தானில் அவுஸ்திரேலிய குடும்பத்தினரை, ஆயுதம் ஏந்திய கொள்ளையர்கள் எனத் தவறாகக் கருதி பாகிஸ்தான் அதிரடிப் படை பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அவுஸ்திரேலிய சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
அவுஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த நான்காம் வகுப்பு மாணவியான ஹானியா அகமது என்ற அந்தச் சிறுமி, கடந்த புதன்கிழமையன்று பஞ்சாப் மாகாணத்தில் உள்ள சக்வால் நகரில் பஞ்சாப் பொலிஸ் எலைட் ஃபோர்ஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தாக்குதலில் சிறுமியின் தந்தை அதீல் அகமது (39) மற்றும் அவரது 11 வயது அண்ணன் ஆஃபான் ஆகியோர் படுகாயமடைந்த நிலையில், தாயார் எவ்வித காயமுமின்றி தப்பியுள்ளார்.
துப்பாக்கிச் சூடு
துப்பாக்கி முனையில் தங்களைக் கொள்ளையடிக்க முயன்ற கொள்ளையர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக, அக்குடும்பத்தினர் வாடகை காரில் வேகமாகச் செல்ல முயன்றுள்ளனர்.

அந்தப் பரபரப்பான சூழலில், காரில் தப்பி ஓட முயல்வது கொள்ளையர்கள்தான் என்று தவறாகக் கணித்த பொலிஸ் அதிகாரி ஒருவர், காரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார் என்று பஞ்சாப் பொலிஸ் துறை விளக்கமளித்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், ஒரு சிறுமி உயிரிழந்திருப்பதும், குடும்பத்தினர் படுகாயமடைந்திருப்பதும் மிகவும் கொடூரமானது.
விசாரணை
இது குறித்து பாகிஸ்தான் அரசு வெளிப்படையான முறையான விசாரணையை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸ் அதிகாரி தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்தச் சம்பவத்திற்குக் காரணமான இரு கொள்ளையர்கள் மற்றொரு தனித் துப்பாக்கிச் சண்டையில் சுட்டுக் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.