கொழும்பில் இடி மின்னலுடன் கொட்டித்தீர்க்கும் கனமழை - அச்சத்தில் பொதுமக்கள்..
புதிய இணைப்பு
நாட்டில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று(12.10.2026) மாலை 5 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகின்றது.
திடீரெனப் பெய்து வரும் கனமழையால் பொதுமக்கள் தங்களது பயணங்களை மேற்கொள்வதில் அச்சம் அடைந்துள்ளனர்.
முதலாம் இணைப்பு
தற்போது நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலைக் காரணமாக ஆறுகளின் நீர்மட்டம் உயர்வதற்கான வாய்ப்பு இருப்பதாக நீர்ப்பாசனப் பணிப்பாளர் பொறியாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, களனி கங்கை, களு கங்கை, கின் கங்கை, நீல்வலா கங்கை உள்ளிட்ட ஆறுகள் மற்றும் அத்தனாகலு ஓயா, மகா ஓயா ஆகியவற்றின் நீர்மட்டம் உயரக்கூடும் என்று அறிவிப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழையின் காரணமாக, ஈர வலயத்தில் உள்ள சில ஆற்றுப்படுகைகளில் நீர்மட்டம் ஏற்கனவே உயர்ந்த மட்டத்தில் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வானிலை நிலவரங்கள்
தற்போதைய வானிலை நிலவரங்கள் மற்றும் அதன் தாக்கங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இடம்பெற்ற ஒரு சிறப்பு ஊடக சந்திப்பில் பங்கேற்ற போதே அவர் மேற்கண்டவாறு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
போலந்து மொதர மற்றும் பெந்தா போன்ற சிறிய ஆற்றுப்படுகைகளிலும் நீர்மட்டம் உயர்ந்துள்ளதுடன், சில இடங்களில் நீர்மட்டம் அபாய அளவை நெருங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வரவிருக்கும் வானிலை முன்னறிவிப்பின்படி, மத்திய மாகாணத்தின் பல பகுதிகளிலும், வறண்ட வலயத்திற்குள் பாயும் ஆறுகளிலும் நீர்மட்டம் உயரக்கூடும் என நீர்ப்பாசனப் பணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வறண்ட மண்டலத்தில் பெய்யும் மழையால் சில ஆறுகளின் நீர்மட்டம் திடீரென உயரக்கூடும் என்பதால், ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
கனமழைக்கு வாய்ப்பு
இதற்கிடையில், தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகி வரும் காற்றழுத்த தாழ்வுநிலையின் காரணமாக, இன்று இரவு(12) முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வுநிலை ஒரு குறைந்த காற்றழுத்தப் பகுதியாக உருவாகி வருவதாக அத்துறையின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமன்ன தெரிவித்துள்ளார்.

மேலும், சில பகுதிகளில் 100 முதல் 150 மி.மீ வரை கனமழை பெய்யக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில், கடல் பகுதிகளிலும் மழை அதிகரிக்க வாய்ப்புள்ளதால், வானிலை ஆய்வுத் துறையால் வெளியிடப்படும் வானிலை எச்சரிக்கைகளை மீன்பிடி மற்றும் கடற்படை சமூகத்தினர் கவனிக்க வேண்டும் என்றும், பணிப்பாளர் நாயகம் வலியுறுத்தியுள்ளார்.
இருப்பினும், இந்த காற்றழுத்த தாழ்வுநிலை ஒரு கடுமையான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுநிலையாக உருவாகும் என எதிர்பார்க்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள்: பிரித்தானியர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி News Lankasri