நுவரெலியாவில் தீவிரமடையும் சீரற்ற காலநிலை: மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு அச்சுறுத்தல்
நாட்டின் பல மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில், நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற காலநிலை தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது.
தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக மாவட்டத்தின் பல பகுதிகளில் மண்சரிவு, கற்கள் புரள்வு, வெள்ளப்பெருக்கு மற்றும் போக்குவரத்து பாதிப்பு உள்ளிட்ட அனர்த்த நிலைமைகள் ஏற்பட்டுள்ளன.
இதனால் மலையகத்தின் பல பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பல்வேறு அச்சுறுத்தல்களும் ஏற்பட்டுள்ளன.
தொடர்ச்சியாக மழை
தொடர்ச்சியாக மழை பெய்து வரும் நிலையில், நீரேந்தும் பகுதிகளிலும் அதிகளவில் மழைவீழ்ச்சி பதிவாகி வருகிறது. மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீரேந்தும் பிரதேசங்களில் பெய்து வரும் கடும் மழை காரணமாக, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு வான் கதவு தொடர்ந்து திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இதனால் கொத்மலை ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் மற்றும் தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என நீர்த்தேக்கத்துக்குப் பொறுப்பான பொறியியலாளர் அறிவுறுத்தியுள்ளார்.

இதேவேளை, தொடர்ச்சியான மழை காரணமாக நுவரெலியா – ஹட்டன் மற்றும் ஹட்டன் – கொழும்பு பிரதான வீதிகளின் பல பகுதிகளில் மண்திட்டுக்கள் சரிந்து வீழ்ந்துள்ளன.
இதன் காரணமாக சில இடங்களில் ஒரு வழிப் போக்குவரத்து மாத்திரமே இடம்பெற்று வருகின்றது. மேலும், குறித்த வீதிகளின் பல பகுதிகளில் மண்சரிவு மற்றும் கற்கள் புரளும் அபாயம் காணப்படுவதால், இந்த வீதிகளைப் பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகவும் அவதானத்துடன் பயணிக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கை
நீர்வீழ்ச்சிகளை பார்வையிடச் செல்லும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள், புகைப்படங்கள் எடுப்பதற்காகவும் நீர்வீழ்ச்சியின் அருகாமைக்கு செல்வதை தவிர்க்குமாறும் பாதுகாப்புத் தரப்பினர் அறிவுறுத்தியுள்ளனர்.
மத்திய மலைநாட்டில் நிலவும் கனமழையுடனான வானிலை காரணமாக, விமலசுரேந்திர நீர்த்தேக்கம் வான் பாயத் தொடங்கியுள்ளது.

தொடர்ந்து பெய்துவரும் அதிக மழையால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருவதுடன், தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக எந்த நேரத்திலும் மண்சரிவு, கற்கள் புரள்வு மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதால், பொதுமக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்த்து, அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.






